மருத்துவர்கள் பலர், மருத்துவ சிகிச்சையைத் தாண்டி, ரேடியோ ஜாக்கியில் இருந்து, நடன ஆசிரியர், இசைக்குழு அமைப்பாளர் என
பல்வேறு தளங்களுக்கு, தங்களின் எல்லையை விரிவுபடுத்திக் கொள்கின்றனர்.
இப்போதைய தலைமுறை மருத்துவர்கள், ஸ்டெத்தஸ்கோப்பை அணிந்து, புரியாத கையெழுத்தில் தங்களின் மருந்துப் பரிந்துரைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதில்லை.
உயிர்களைக் காப்பாற்றுவதோடு, ரசனை சார்ந்த மற்றும் தங்களின் வேலைக்குச் சம்பந்தமில்லாத பல துறைகளிலும் கால் பதிக்கின்றனர்.
சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷனின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான தலைவர் மற்றும் ஆலோசகரான தோசிஃப் தங்கல்வாடி, சென்னையின் 104.8 ரேடியோ சேனலில் ஆர்.ஜே.வாக இருக்கிறார்.
காலை 10 மணிக்கு மருத்துவமனையில் தொடங்கும் இவரது பணி, இரவு 9 மணிக்கு வானொலி பண்பலையில் முடிகிறது.
மாலை 6 மணிக்குத் தான் என் வேலை முடியும். வானோலியில் ஷோவோ 6 மணிக்கு ஆரம்பித்து விடும்.
அதனால் சனிக்கிழமை பின் மதியங்களில் 6-7 மணிக்கான அந்த வார ரெக்கார்டிங்கை முடித்து விடுவேன் எனக்கூறும் தோசிஃப், இது பணத்துக்காகக் கிடையாது.
எனக்குப் பிடித்த இரண்டு மாறுபட்ட துறைகளில் என்னால் ஜெயிக்க முடியும் என்பதில் பெருமை கொள்கிறேன் எனவும் சொல்கிறார்.
இவரோ, தினமும் இரண்டு வேலைகளைச் செய்ய, மற்றவர்கள் தங்களின் இரண்டாவது வேலையை நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்கின்றனர்.
மேத்தா மருத்துவமனையின் நுண்ணுயிரியலாளர் அக்ஷித் திம்மையா, நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது வாடிக்கையாளார்களுக்கு ஃபிட்னஸ் பயிற்சியளிக்கிறார்.
சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷனில் பயிற்சியாளராக இருக்கும் ஸ்ரீலக்ஷ்மி, அயனாவரத்தில் மோகினியாட்டம், குச்சுப்புடி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை, குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிறார்.
இது போலவே பலர், மற்ற துறைகளிலும் வேலை பார்க்கின்றனர்.
பொது மருத்துவராகப் பணிபுரியும் அருண் குமார், ஸ்பானிஷ், ஃப்ரென்ச் உள்ளிட்ட மொழிகளைக் கற்றுத் தருவதோடு படங்களுக்குக் கதையும் எழுதுகிறார்.
எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் போது சின்னச் சின்ன வேலைகள் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
அப்போதில் இருந்து, பல்வேறு துறை சார்ந்த வேலைகளை பேலன்ஸ் செய்யப் பழகிக் கொண்டேன் என்று சிரிக்கிறார் அருண்.
இளம் மருத்துவர்கள் மட்டும் தான் மாறுபட்ட துறைகளை நாடுகிறார்கள் என்றில்லை.
சூர்யா மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளையின் ஆலோசகர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான வரதராஜன், ஆறு மருத்துவர்களுடன் சேர்ந்து ஓர் இசைக்குழுவை நடத்தி வருகிறார்.
மெல்லிசை மருத்துவர்கள் என்ற பெயரில், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மெல்லிசைக் கச்சேரி நடத்தி, கிடைக்கும் வருமானத்தை பொதுநலப் பணிகளுக்கு அளிக்கின்றனர்.
இது குறித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் வேடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட குழு இது. பின்னாளில் முக்கியமான நிகழ்ச்சிகளில் நடத்துமளவுக்குத் தேறி விட்டோம்.
இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, தொண்டு நிறுவனங்களுக்கு அளித்து விடுகிறோம் என்கிறார் வரதராஜன்.

