வியாபம் ஊழல் விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்ட டாக்டர் ஜெகதீஷ் சாகர் கரன்சி நோட்டுகளின் மீது படுத்து தூங்கியதும் விலை உயர்ந்த கார் களில் பவனி வந்ததும் விசா ரணையில் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரியம் (வியாபம்) சார்பில் மருத்துவம், பொறியியல் படிப்பு மற்றும் அரசுப் பணி காலியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வில் மட்டும் ரூ.5000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை சுமார் 40 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த ஊழல் வழக்கில் இந்தூரை சேர்ந்த டாக்டர் ஜெகதீஷ் சாகர் (42) என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இவர் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்து வசதி படைத்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்த்துள்ளார். இதற்காக உத்தரப் பிரதேசம், பிஹாரில் இருந்து திறமையான மாணவர்களை வரவழைத்து நுழைவுத் தேர்வை எழுதச் செய்துள்ளார். அவர்களுக்கு 2 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்.
ஒரு மருத்துவப் படிப்புக்கான இடத்துக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை வசூல் செய்துள்ளார். கடந்த 1997-ம் ஆண்டு முதலே இந்த முறைகேட்டில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
முதலில் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த அவர் பின்னர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மதிப்பெண்களை திருத்தியுள்ளார். அவர் மூலம் ஏராளமான மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அதில் கிடைத்த பணத்தில் இந்தூரில் மிகப் பெரிய பங்களாவை கட்டியுள்ளார். குவாலியர், பிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களை வாங்கிக் குவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் வீட்டுமனைகளை வாங்கி வைத்துள்ளார்.
தனது படுக்கை அறையில் கரன்சி நோட்டுகளை பரப்பி அதன் மீது தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். விலை உயர்ந்த கார்களில் பவனி வந்துள்ளார். சுமார் 16 ஆண்டுகள் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு கோடிகளை அள்ளிய அவர் 2013-ம் ஆண்டில்தான் முதல்முறை யாக கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச போலீஸாரின் மென்மையான போக்கால் டாக்டர் ஜெகதீஷ் சாகர் இப்போதும் சொகுசாகவே வாழ்கிறார். ஆனால் இவ்வழக்கு தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருப்பதால் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
