ஆப்கன் பெண் கொலையில் மரண தண்டனை ரத்து !

ஆப்கானிஸ்தானில் ஃபர்குந்தா என்ற இளம் பெண்ணை மிகக் கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கான மரண தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.

 null

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பரவலான கண்டனத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் அந்த கொலையின் குரூரம்.

குரானின் பிரதியை எரித்தார் என்று பொய்யாக குற்றம்சாட்டப்பட்டிருந்த ஃபர்குந்தா என்கிற அந்த இளம் பெண், இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்றில் வைத்து கூட்டாக தாக்கிக் கொல்லப்பட்டார்.

அதுவும் அவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது சடலத்தின் மீது கார் ஏற்றப்பட்டது. பிறகு அவரது சடலம் எரிக்கப்பட்டது.
 
ஃபர்குந்தாவின் இந்த கோரக்கொலை பெண்களை வீதிக்கு வந்து போராடவைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து வழக்கு நடத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த நான்குபேரில் இருவருக்கான தண்டனை இருபது ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதோடு, மற்றொருவருக்கான தண்டனை 10 ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த மதவழிபாட்டுத்தலத்தின் பொறுப்பாளர் தற்போது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

 null

இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் விசாரணைகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையற்ற முறையில் நடந்ததாக, ஃபர்குந்தாவின் குடும்பம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் கவலை வெளியிட்டிருக்கிறார்.
 
இன்றைய நீதிமன்றத் தீர்ப்பு தமக்கு ஏற்புடையதல்ல என்கிறார் ஃபர்குந்தாவின் சகோதரர் நஜிமுல்லா மலிக்சாதா.

"20 ஆண்டு சிறைத் தண்டனையை நாம் ஏற்கமாட்டோம். அதனால் பலனில்லை. அதாவது இந்த கொலையாளிகள் பிறகு விடுவிக்கப்பட்டு விடுவார்கள்.

முன்னர் வழங்கிய மரண தண்டனையையே தான் நாங்கள் கோருகிறோம்", என்றார் பர்குந்தாவின் சகோதரர் நஜிமுல்லா மலிக்சாதா.
பெண்ணிய செயற்பாட்டாளர்களுக்கும் இன்றைய தீர்ப்பு விரக்தியை தோற்றுவித்திருக்கிறது.

"இங்குள்ள நீதி நடைமுறை பெண்களுக்கு எதிரானது தான் என்பது இந்த வழக்கின் மூலம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஃபர்க்குண்டாவின் வழக்கில் அதனை நாம் நன்றாகவே பார்த்துவிட்டோம்.

ஃபர்குந்தா ஒரு பெண் என்றபடியால் தான் கொல்லப்பட்டார். ஒரு பெண் என்பதால் தான் அவருக்கு நீதி கிடைக்கவில்லை," என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளர் வஸ்மா ஃபிராக்.

ஃபர்குந்தாவின் கொடூரக்கொலை ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சில் ஆழ்த்தியது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எப்போதாவது நீதி கிடைக்குமா என்ற கேள்வியையும் இன்றைய தீர்ப்பு மீண்டும் எழுப்பியிருந்தது.

ஃபர்குந்தா கல்லெறிந்து கொல்லப்பட்ட தர்கா புதிய வர்ணபூச்சுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், ஃபர்குந்தாவின் கொலை ஏற்படுத்திய வடுக்கள் மட்டும் இன்னமும் ஆறாமல் அப்படியே இருக்கின்றன.
Tags:
Privacy and cookie settings