ஆஷஸ் பெயர் வந்தது எப்படி? – ஒரு பார்வை…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இது இவ்விரு அணிகள் மோதிய 9-வது டெஸ்டாகும். இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்தது.
இதில் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 85 ரன்களை கூட எடுக்க முடியாமல் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டு போனது. இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.

இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு எரிச்சலடைந்த, ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் ‘இங்கிலாந்து கிரிக்கெட் மடிந்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆஷஸ்) ஆஸ்திரேலியா எடுத்துச் செல்கிறது’ என்று எழுதப்பட்டிருந்தது.

அதன் பிறகு 1882-83-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது இழந்த ஆஷசை மீண்டும் இங்கிலாந்து கொண்டு வருமா? என்று அந்த பத்திரிகை கேள்வி எழுப்பியது. அப்போதைய இங்கிலாந்து கேப்டன் இவோ பிலிக், இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை (ஆஷஸ்) திரும்ப கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.

அதன்படியே டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. அப்போது மெல்போர்னில் கூடியிருந்த சில பெண்கள் கலைநயத்துடன் செய்யப்பட்ட அழகிய சிறு ஜாடியை இவா பிலிக்கிடம் நினைவு பரிசாக அளித்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட்டின் சாம்பலை திரும்ப தருகிறோம் என்பதை குறிப்பிடும் வகையில், ஸ்டம்பின் மீது வைக்கப்படும் பெய்ல்சை எரித்து அதன் சாம்பலை அந்த ஜாடிக்குள் வைத்திருந்தனர்.

இப்படி தான் ‘ஆஷஸ்’ பெயர் தோன்றியது. 1882-83-ம் ஆண்டில் இருந்து இவ்விரு அணிகள் இடையே நடக்கும் டெஸ்ட் தொடர் ‘ஆஷஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவா பிலிக் மறைந்த பிறகு அந்த சிறிய ஜாடி 1927-ம் ஆண்டு மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்போது அது லண்டன் எம்.சி.சி. அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மாதிரி கோப்பை தான், தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பரிசாக வழங்கப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings