பருவ நிலை மாற்றங்களிலிருந்து சுற்றுச்சூழலையும், சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா விஸ்வநாத் உள்பட 12 பேருக்கு மாற்றத்திற்கான வெற்றியாளர்கள் விருதை வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துவரும் சுனிதா விஸ்வநாத், பெண்கள் நலன் காக்கும் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
"சாதனா' என்னும் தன்னார்வ அமைப்பை சிலருடன் சேர்ந்து உருவாக்கி, ஹிந்து மதத்தின் கொள்கைகளை அவர் பரப்பி வருகிறார்.
அவருடைய சேவைகளைப் பாராட்டும் விதத்தில், அவருக்கு மாற்றத்திற்கான வெற்றியாளர்' விருது வழங்கப்படுகிறது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டது குறித்து சுனிதா விஸ்வநாத் கூறுகையில், ஹிந்து மதமானது அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்து உயிரினங்களையும் அரவணைத்துச் செல்லக் கூடியது.
அத்தகைய மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் சிறுவயது முதல் கடைபிடித்து வருவதன் காரணமாக, சமூக நீதிக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் போராடி வருகிறேன்' என்றார்.

