ஆந்திர மாநிலத்தில் மீன் மழை !

ஆந்திராவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் இரவு கிருஷ்ணா மாவட்டத்தில் மீன் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித் துள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், நந்திகாமா மண்டலம், கோள்ளமுடி கிராமத்தில் விவசாயி கள் நேற்று வழக்கம்போல் தங்களது வயல்களுக்குச் சென்றனர். 

அப்போது வயல்களில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையில் நூற்றுக்கணக்கான மீன்கள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். 

பின்னர் அவைகளை பொறுக்கி வீட்டுக்கு கொண்டு சென்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியபோது, வியாழக்கிழமை இரவு பெய்த மழையில் வானத்தில் இருந்து மீன்கள் விழுந்துள்ளன என்று தெரிவித்தனர். 

விவசாய நிலங்களில் மட்டுமல்லாது அந்த பகுதி சாலைகளிலும் மீன் மழை பொழிந்திருப்பதாக பகுதிவாழ் மக்கள் கூறினர். 

இந்த மீன்கள் ‘வாலகா’ வகையை சேர்ந்தது. அவற்றை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் நேற்று கோள்ளமுடி கிராமத்தில் குவிந்தனர். இந்த தகவல் ஆந்திரா, தெலங்கானா முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

மீன் மழை பெய்வது எப்படி? 
 
மூன்றாம் நூற்றாண்டில் எகிப்து நாட்டில் மீன் மழை பெய்ததாக அந்த நாட்டு இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோல பல நூற்றாண்டுகளாக மீன் மழை பெய்து வருகிறது. இது கற்பனை கதையல்ல, உண்மைதான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அண்மையில் இலங்கையின் யாழ்ப்பாணம், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மீன் மழை பெய்ததாக செய்திகள் வெளியாகின. இதன் பின்னணி குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

‘பொதுவாக நீர்நிலைகளின் மீது சூறாவளி மையம் கொள்ளும்போது அவற்றில் வாழும் மீன்கள், தவளைகள் உள்ளிட்ட உயிரினங்கள் சுழல் காற்றில் வானத்தில் மேலெழும்பி அடித்துச் செல்லப்படுகின்றன. 

சூறாவளியின் சீற்றம் குறையும் பகுதிகளில் மீன்கள் தரையில் விழுந்து சிதறுகின்றன. 

அதையே பொதுமக்கள் மீன் மழை என்று குறிப்பிடுகின்றனர். சூறாவளி அதிகம் வீசும் நாடுகளில் தவளை, தக்காளி மழையும்கூட பெய்துள்ளன’ என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:
Privacy and cookie settings