அன்று : சோதனை குழாய் குழந்தை இன்று : அழகான மணப்பெண்!

மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் பலருக்கும் கூட, அந்த மணப்பெண் குறித்த ‘விசேஷம்’ தெரியாது.
அது... அந்த மணப்பெண் ஹர்ஷா சவ்தாதான் மும்பையின் முதல் ‘டெஸ்ட் டியூப் பேபி’. 1986–ம் ஆண்டு ஆகஸ்ட் 6–ம் தேதி ஹர்ஷா பிறந்தபோது அது மருத்துவ அதிசயமாகவே கருதப்பட்டது.

ஆரம்பத்தில் இவர்தான் இந்தியாவின் முதல் ‘டெஸ்ட் டியூப் பேபி’யாக புகழப்பட்டார். பின்னரே, கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு குழந்தை அந்தப் பெருமையை தட்டிச் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியானது.

அன்று சோதனை குழாய் குழந்தையாக இருந்த ஹர்ஷா, இப்போது இளமை பொங்கும் அழகு தேவதையாக, மண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த நிதி ஆலோசகரும், தான் மூன்றாண்டுகளாக அறிந்தவருமான திவ்யபால் ஷாவை கரம்பிடித்திருக்கிறார், 25 வயதான ஹர்ஷா.

‘‘இது எனது வாழ்க்கையில் மிக மிக சந்தோஷமான தருணம். இதைவிட ஒரு மகிழ்ச்சியை நான் எதிர்பார்க்க முடியாது’’ என்கிறார்,

உணர்ச்சிமயமான ஹர்ஷா. கோடியில் ஒருவராகப் பிறந்திருந்தாலும் வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்தே வந்திருக்கிறார், ஹர்ஷா.

கடந்த 2003–ம் ஆண்டு இவரது தந்தை காலமானது, குடும்பத்தைத் தடுமாற வைத்திருக்கிறது. சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஹர்ஷாவின் தலையில் விழுந்தது.

2011–ம் ஆண்டு அடுத்த அடியாக கடுமையான உடல்நலக்குறைவுக்கு உள்ளானார் ஹர்ஷா. தொடர் விடுப்பு காரணமாக, தனியார் நிறுவனத்தில் இவர் பார்த்த வேலை பறிபோனது. அடுத்த வேலை தேடி தவிக்கும் நிலை.

நடமாடும் மருத்துவ அதிசயமாக கருதப்பட்ட ஹர்ஷாவுக்கு, அரசாங்கமும் கைகொடுக்கவில்லை. 2012–ம் ஆண்டுதான் ஹர்ஷாவுக்கு நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கின.

அந்த ஆண்டு இவர் புதிய வேலை ஒன்றில் சேர்ந்தது மட்டுமல்லாமல், அங்கு கிடைத்த உயிர்த்தோழி பிரதிக்ஷாவால் திவ்யபாலின் அறிமுகமும் கிடைத்தது. ஹர்ஷாவுக்கும், திவ்யபாலுக்கும் ஒருவரை ஒருவர் பார்த்தவுடனே பிடித்துப் போய்விட்டதாம்.

திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தவுடன், குஜராத் இந்துப் பெண்ணான ஹர்ஷா, திவ்யபாலின் ஜைன மதத்துக்கு மாறியிருக்கிறார். “எனது மகிழ்ச்சியை எப்படிச் சொல்வதென்றே தெரிய வில்லை.

திவ்யபாலின் குடும்பத்தினர் அன்பாகவும், அக்கறையாகவும் இருக்கிறார்கள். அருமையான வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கிறது’’ என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறுகிறார், ஹர்ஷா.

சரி, கணவர் திவ்யபால் மனைவி ஹர்ஷா பற்றி என்ன சொல்கிறார்? 

‘‘என் மனைவி ஒரு மருத்துவ அதிசயம் என்பதை முதல்முறை அறிந்தபோது நான் திகைத்துப் போனேன்.

‘டெஸ்ட் டியூப் பேபி’ என்பது இன்று சாதாரணமாக இருக்கலாம். ஆனால் 1986–ம் ஆண்டு அது எவ்வளவு பெரிய அதிசயம்! ஆனால் இந்த விஷயத்துக்காக மட்டும் நான் அவளை விசேஷமாகக் கருதவில்லை.

அவள் சிறந்த பெண். என்னை பலவிதங்களில் கவர்ந்திருக்கிறாள். எல்லா விதத்திலும் அவள் எனக்கு ‘ஸ்பெஷல்’தான்!’’ என்று அன்போடு தனது மனைவியை அணைத்துக்கொள்கிறார் திவ்யபால்.
Tags: