விமான நிலையத்தின் கதி என்ன? எல்லாம் மக்களோட வரிப்பணம் தானே!

சென்னை: "என்னடா இன்னும் நடக்கலையேனு பார்த்தேன் நடந்துருச்சு" இந்த டயலாக் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, சென்னை விமான நிலையத்திற்கு கரெக்டாக பொருந்தும்.
அந்த அளவிற்கு இதுவரையில் 39 தடவை உடைந்து விழுந்துள்ளன அதன் கண்ணாடி கதவுகளும், மேற்கூரைகளும். இதோ 40ஆவது தடவையாக உடைந்து போயுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தின் மதிப்பு இரண்டாயிரம் கோடி ரூபாய் (எல்லாம் மக்கள் பணம்தான்). ஆனால், கட்டப்பட்ட நாட்களில் இருந்து மேற்கூரையும், கண்ணாடிக் கதவுகளும் உடைந்து விழுவது ஒரு தொடர்கதையாகவே ஆகிப் போய்விட்டது.

என்ன ஒரு சின்ன சந்தோஷமென்றால், இந்த உடைந்துவிழும் "மகத்தான" சம்பவம் உள்நாடு, வெளிநாடெல்லாம் பார்ப்பதில்லை.

இரண்டு முனையங்களிலும் பாரபட்சமின்றி இதே கதைதான். இதில் இரண்டு, மூன்று பேருக்கு அடி வேறு. (பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர ஊழியர்கள்தான், பெரிய வி.ஐ.பிகளாய் இருந்திருந்தால் உடனே கவனித்திருப்பார்களோ என்னவோ!).

இந்தக் "காயலான் கடையை" மன்னித்துக் கொள்ளுங்கள் விமான நிலையத்தினை விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜூ கடந்த அக்டோபர் மாதம் வந்து பார்வையிட்டு சென்றார்.

ஆனாலும், இன்றுவரை இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்த நிலையில்தான் ஒரு பெரிய கண்ணாடிக் கதவு உடைந்து சுக்கல்சுக்கலாகி விழுந்துள்ளது. இது 40வது டமால் ஆகும்.

சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள 17-ம் எண் நுழைவு வாயிலில் ஏற்பட்ட இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என சென்னை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல மேலும் பல கண்ணாடிகள் உடையும், அதையும இவர்கள் வெட்கமே இல்லாமல்... தெரிவிப்பார்கள்... தெரிவித்துக் கொண்டு மட்டுமே இருப்பார்கள்...

50 தடவை விழறப்போ மறக்காம சொல்லியனுப்புங்கப்பா வந்து மாலை, மரியாதையோட "வெற்றிகரமான 50வது நாள்" பொன் விழாவும் கையோட நடத்திக் கொடுத்துடறோம்!
Tags:
Privacy and cookie settings