உடுமலை பஸ் நிலையத்துக்கு தினசரி ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதில் வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் களுக்கு செல்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் என பலதரப்பினரும் அடங்குவர். அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
வெளியூர்களி லிருந்து உடுமலைக்கு வந்து படிக்கும் மாணவ மாணவிகள், உடுமலை யிலிருந்து வெளியூ ர்களுக்கு சென்று படிக்கும் மாணவ - மாணவர்கள் என பஸ் நிலையம் மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
சம்பவத்தன்று மாலை நேரத்தில் உடுமலை பஸ் நிலையத்துக்கு உள்ளே கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர். ஒரு சில மாணவிகள் தனியாகவும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு கல்லூரி மாணவியின் பின்னால் 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் ஏதோ பேசியபடி சென்றார்.
இதனால் பயந்துபோன அந்த மாணவி, நடையின் வேகத்தை அதிகப் படுத்தினார். ஆனாலும் அந்த வாலிபர் மாணவியை பின் தொடர்ந்தார்.
இந்த நிலையில் அந்த வாலிபர், திடீரென்று மாணவியின் கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அந்த வாலிபரின் கன்னத்தில் ‘பளார்’ என ஒரு அறை விட்டார்.
இதை எதிர்பார்க்காத அந்த வாலிபர், இனி இங்கு நின்றால் பொது மக்கள் தன்னை தாக்கி விடுவார்கள் என பயந்து அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் அந்த மாணவி பஸ்சுக்காக இயல்பாக காத்திருக்கத் தொடங்கினார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும் அந்த மாணவியின் துணிச்சலை வியந்து பாராட்டினர்.
பெண்கள் இது போல துணிச்சலாக இருந்தால் யாரும் வாலாட்டப் பயப்படுவர் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது.