தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி? - காங்கிரஸ் எம்பி !

0
கரூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்ட ணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி ‘மாலை மலர்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:
தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி?


கே: முதன் முதலாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ப: இந்த வெற்றி சாதாரண மக்களுக்கான வெற்றியாக பார்க்கிறேன். தனிப்பட்ட ஜோதிமணிக்கு கிடைத்த வெற்றி இல்லை. அரசியலில் ஒரு பிம்பம் இருக்கிறது. அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் வாரிசாக இருக்க வேண்டும். 

குற்றப் பின்னணி உடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் இன்றைக்கு வேகமாக பரவி வேரூன்றி யுள்ளது. ஆனால் தொடர்ச்சி யாக நேர்மையாக, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு பணியாற்றி னால் சாதாரண பின்னணி உடையவரும் எந்த உயர் பதவிக்கும் வர முடியும் என்ற செய்தியை என் வெற்றி தந்திருக்கிறது.

கே: அரசியலில் பெரிய பின்புலம் இல்லாத நீங்கள் எப்படி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டீர்கள்?

ப: என்னை வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கட்சிக்குள்ளும், வெளியிலும் பொருளாதார பின்னணி உடையவர்தான் எம்.பி. தேர்தலில் போட்டியிட முடியும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக இருந்து எனக்கு வாய்ப்பளித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அதனை ஏற்றுக்கொண்டார்.

தி.மு.க - காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமை யாக உழைத்து வெற்றி பெறச்செய்தனர். தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்கள் என்னை தங்களின் வீட்டின் ஒரு பெண்ணாக பார்த்துக் கொண்டார்கள். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறது.

கே: பாராளு மன்றத்தில் முதன் முதலாக என்ன பேசப் போகிறீர்கள்?

ப: என்ன பேசுவது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களின் உரிமை, வளர்ச்சி மற்றும் ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமை, அடையாளம், வளர்ச்சி போன்ற வற்றிற்காக என் குரல் ஒலிக்கும். இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் பா.ஜ.க. செயல்பட்டால் மோடிக்கு எதிராக போர்க்குரல் தொடுப்பேன்.

கே: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றாலும், தேசிய அளவில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதே?

ப: காங்கிரஸ் கட்சியின் தோல்வி வலி நிரம்பியது. இந்த தோல்வியானது கட்சியை பாதிக்கப்  போவதில்லை. தனி மொழி, தனி கலாச்சாரம் போன்ற வற்றை விரும்பும் மாநில மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித் துள்ளனர். பிரசாரத்தின் போது ராகுல் காந்தி ஒற்றுமையையும், அன்பையும் விதைத்தார். ஆனால் அதற்கு பதிலாக மோடி பிரிவினையை யும், வெறுப்பையும் விதைத்தார். 


இந்த தேசத்தின் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், பெண்களின் உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகள் பற்றி மோடி வாய் திறக்க வில்லை. 2014-ல் மோடி வெற்றி பெற்ற போது அதை செய்வார், இதை செய்வார் என ஒரு கொண்டாட்டம் இருந்தது. 

ஆனால் இப்போது அதை காணவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித இறுக்கமே காணப் படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பல மாநிலங்களில் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. அது சீட்டுகளாக மாறவில்லை. பிரதமர் மோடி கடந்த கால தவறுகளை திருத்தி கொள்வார் என எதிர்பார்க் கிறோம்.

கே: தமிழகத்தில் மட்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி எப்படி அமோக வெற்றியை பெற்றது?

ப: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆரம்பத்திலேயே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். கடுமையாக உழைத்தார். அதனை மக்களும் ஏற்றுக் கொண்டனர். மோடியின் அடக்கு முறையையும், எடப்பாடி பழனி சாமியின் அடிமை ஆட்சியையும் தமிழக மக்கள் விரும்ப வில்லை. அதனால்தான் அமோக வெற்றியை தந்திருக்கிறார்கள். மோடியின் அடக்குமுறை கேரளாவிலும் எடுபடவில்லை.

கே: 4.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தீர்களா?
தம்பிதுரையை வீழ்த்தியது எப்படி?
ப: நான் வேட்பாளராக அறிவிக்கப் பட்டவுடன் தம்பி வி.செந்தில்பாலாஜி (தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) யும், நானும் அமர்ந்து பேசினோம். குழுக்கள் அமைத்து கிராமங் களுக்கு சென்று அவர்களின் பிரச்சனை களை அறிந்து தனித்தேர்தல் அறிக்கை தயாரித்தோம். எதிர் வேட்பாளர் மூத்த அரசியல்வாதி பலமுறை கரூர் தொகுதியில் வென்றவர் என்பதை அறிந்து பிரசாரத்தை முன்னெடுத்தோம். 

அவர்கள் ஆளுங்கட்சி எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். ஆனால் நாங்கள் நேர்மையாக, அமைதியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தோம். முதற்கட்ட பிரசாரத்தின் போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கணித்தோம். 


பின்னர் போக, போக மக்களின் தன்னெழுச்சி, உணர்ச்சி வெள்ளத்தை பார்த்த போது அது இன்னும் அதிகரிக்கும் என்பது தெள்ள தெளிவாக தெரிந்தது. கரூர் பாராளுமன்ற தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்.

கே: ராகுல் காந்தியுடன் பேசினீர்களா?

ப: பேசினேன், வாழ்த்து தெரிவித்தார். விரைவில் அவரை சந்திக்க உள்ளேன். பதவி ஏற்பு தேதி உறுதியாக வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings