ஓட்டு கேட்க ஹெலிகாப்டரில் செல்லும் மிஸ்டர் எடப்பாடி?

0
கஜா புயலால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
கஜா புயல் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் டெல்டா பகுதிகளை சூறையாடி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில், 

நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய இருக்கின்றார். 


தரை மார்க்கமாக இல்லாமல், ஆகாய மார்க்கமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 

இதர கட்சியினர் என அனைவரும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிவரும் நிலையில், 

முதல்வர் நாளை கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் செல்ல உள்ளது டெல்டா மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இது தொடர்பாக இணைய தளங்களில் முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து இணைய வாசிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

நமக்கும் இது தொடர்பாக முதல்வரிடம் கேட்க சில கேள்விகள் உள்ளது.

டெல்டா பகுதிகள் புயலால் சூறை யாடப்பட்டு தமிழகத்தில் இருந்து தனிமைப்பட்டு கிடக்கும் இந்த சூழ்நிலையில், 

கடந்த நான்கு நாட்களாக என்ன செய்து வருகின்றீர்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களே! 

சேலத்தில் பாலம் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தேன் என்று கூற போகின்றீர்களா 

அல்லது சொந்த பந்தங்களின் கெடாவெட்டில் பிசியாக இருந்து விட்டேன் என்று கூற இருக்கின்றீர்களா?

அல்லது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போல எனக்கு புயல் அடித்ததே தெரியாது என்று சொல்ல போகின்றீர்களா 

அல்லது நான்கு நாட்களாக தொலைக்காட்சி பார்க்க வில்லை, பார்த்திருந்தால் 

முதல் ஆளாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றிருப்பேன் என்றாவது கூறப் போகின்றீர்களா..?

ஒட்டுமொத்த தமிழகமும் டெல்டாவில் குவிந்திருக்க, நீங்கள் சேலத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன? 


ஒருவேளை எடப்பாடி தொகுதியில் உங்கள் வெற்றியை உறுதிப் படுத்துவதற்காக விழாக்களில் கலந்து கொள்வதாக 

 நாங்கள் புரிந்து கொண்டாலும் கூட, அந்த ஒரு தொகுதியின் வெற்றி என்பது ரஜினி படத்தில் வரும் 

வசனம் போல 100 தொகுதிகளின் வெற்றிக்கு சமம் என்று நீங்கள் கருதுகின்றீர்களா..?

இந்த பாலத்தை 10 நாட்கள் கழித்து திறந்தால் பாலம் என்ன உங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறதா 

அல்லது உங்களிடம் சண்டை போட்டுக் கொண்டு கோபித்துக்கொள்ளப் போகின்றதா? இல்லை, 

பாலத்தை இந்த தேதியில் திறந்தே ஆக வேண்டும் என்று சேலம் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்களா? 

எங்களுக்கு தெரிய வில்லை... உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து எங்களுக்கு விளக்குங்கள்.

இந்த தாமதத்துக் காவது ஏதாவது ஒரு நொண்டி சாக்கு சொல்லி நீங்கள் சமாளித்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. 

ஏனென்றால் உங்களின் பழைய வரலாற்றை தமிழகம் நன்கறியும். 

ஆனால், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீங்கள் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ய உள்ளதை தான் 

பாதிக்கப்பட்ட மக்கள் எப்படி ஜீரணிக்க போகின் றார்களோ என்று நினைத்தால் நெஞ்சம் கனக்கின்றது!

கடந்த தேர்தலில் ஓட்டு கேட்க டெல்டா பகுதிகளுக்கு சென்றீர்களே அப்பொழுது நீங்கள் ஹெலிகாப்டரில் சென்றதாக எங்களுக்கு நினை வில்லையே. 

இப்பொழுது என்ன புதிதாக ஹெலிகாப்டர். சாலை மார்க்கமாய் பயணம் செய்ய முடியாத நிலை இருக்கும் போது, 


மாநில முதல்வர்கள் விமானங்களை பயன்படுத்தி பாதிப்பு பகுதிகளை பார்வை யிடுவார்கள் என்பது தான் வரலாறு.

ஆனால் இப்பொழுது வீசிய புயல், குறிப்பிட்ட மாவட்டங்களை மட்டுமே நாசப்படுத்தி யுள்ளது. 

சாலைகள் மோசமாக சேதமாக வில்லை. ஆகையால் சாலை மார்க்கமாக செல்வது என்பது கடினமானது அல்ல. 

மேலும் சாலை வழியாக சென்றால் மட்டுமே, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க முடியும், 

அவர்களின் குறைகளை கேட்டறிய முடியும். ஆனால், அதனை நீங்கள் தவிர்த்துள்ளீர்கள்.

அதனை நீங்கள் விரும்பி தவிர்த்தாக நாங்கள் நினைத்து கொள்ளலாமா அல்லது 

உங்களால் ஓ.எஸ் மணியன் போல 6 அடி சுவரை எகிறி குதிக்க முடியாததாலா? என்ன காரணம் என்று முடிந்தால் கூறுங்கள்.


என்ன காரணமாக வேண்டு மானாலும் இருக்கட்டும், ஆனால் வாக்கு கேட்க ஹெலிகாப்டரில் வர முடியாது என்பதையாவது உணருங்கள். 

ஹெலிகாப்டர் அல்ல ராக்கெட்டில் போனாலும் 'பூனை புலியாகாது' என்பதை யாவது உணருங்கள் எடப்பாடியாரே..!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings