ஜெயலலிதா உயிருடன் இருந்த வரைக்கும் ஜெ. புராணம் பாடிக்கொண்டிருந்த நடிகர் ராதாரவி இப்போது, தமிழகத்தின் ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்.
2001- 2006 அ.தி.மு.க ஆட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர், கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராகவும் வலம் வந்தார். அதன் பிறகு கட்சியில் தீவிரமாக இயங்க வில்லை.
அ.தி.மு.க மேடைகளில் தென்படா விட்டாலும் கூட அ.தி.மு.க-வின் அபிமானியாகவே இருந்தார்.
இப்போது அறிவாலயத்தில் அச்சாரம் போடுவதற்காகத் தயாராகி விட்டார் ராதாரவி. அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
ஏன் இந்தத் திடீர் மனமாற்றம்?
நடிகர் சந்திரசேகர் மகளின் திருமணத்தில் தான், ‘ஸ்டாலின் மட்டுமே எதிர்கால அரசியலின் ஒரே தகுதிவாய்ந்த தலைவர் என்றேன்.
இன்றைய அரசியல் சூழலில் ஆறு அறிவு கொண்ட எல்லோரும் அப்படித் தான் சொல்வார்கள். சுறுசுறுப்பான மனிதர், இளைஞர்களைப் புரிந்து கொண்டவர்.
அரசியலை நன்கறிந்தவர், தமிழகத்தில் ஸ்டாலின் ஒருவர் தான். அதனால் தான் அப்படிப் பேசினேன்.
ஆனால், தி.மு.க-வில் சேரப் போவதாகச் சொல்லவில்லை. சேர்ந்தாலும் என்ன தவறு இருக்கிறது... அது என் தாய்வீடு தானே!
ஒரு கட்சியில் இருந்து கொண்டு மாற்றுக் கட்சித் தலைவரைத் துதிபாடுவது சரியா?
தி.மு.க-வில் இருந்து வந்த எனக்கு, உரிய மரியாதையை அளித்தவர் ஜெயலலிதா. ஒரு பேச்சாளராக என்னை கௌரவமாக நடத்தியதோடு எம்.எல்.ஏ-வாகவும் ஆக்கினார்.
அந்த நன்றியை என்றும் நான் மறக்க மாட்டேன். அவர் காலம் வரை நன்றியுடனே இருந்தேன்.
அவர் இருந்த போதே ராதாரவி இப்படி பேசியிருந்தால் தான் நீங்கள் ‘கட்சித் துரோகி’ என்று சொல்ல முடியும். நான் இப்போது தானே பேசுகிறேன்.
ஜெயலலிதாவையோ, எம்.ஜி.ஆரையோ நான் எதுவும் குறைசொல்லிப் பேசவில்லையே. ‘இன்றைய அரசியல் சூழலில் ஸ்டாலின் தகுதியானவர்’ என்கிறேன், அவ்வளவு தான்.
ஜெயலலிதாவுடனேயே என் அரசியல் பயணத்தை முடித்துக் கொள்ள முடிவெடுத்தேன்.
விரக்தியில் யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே தான் இருந்தேன். ஒரு நல்ல மேடை கிடைத்த போது அதைத் தவிர்க்க முடியாமல் சொல்ல வேண்டியதாகி விட்டது.
அ.தி.மு.க-வின் புதிய தலைமைக்கும் உங்களுக்கும் என்னதான் முரண்?
எனக்கு இப்போதுள்ள தலைமையுடன் எந்த முரண்பாடும் கிடையாது. இவர் தகுதியானவர் என்பதால், அவர் தகுதியற்றவர் என்பதல்ல அர்த்தம்.
அவர்கள் பற்றிப் பேசும் அளவுக்கு கட்சியின் பெரிய பதவிகளில் நான் இருந்தது இல்லை.
அப்படியே இருந்திருந்தாலும் நேற்று வரை இருந்த ஒரு கட்சியை விமர்சனம் செய்வது நாகரிகமும் இல்லை. ஜெயலலிதா உள்ளவரை அவருக்கு நன்றியுடன் நடந்து கொண்டேன். அவ்வளவு தான்.
ஜெயலலிதா வுக்குப் பிறகு பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வந்திருக்கும் சசிகலா, அதில் தாக்குப் பிடிப்பாரா?
அ.தி.மு.க என்று சொல்ல வில்லை... பொதுவாகவே சொல்கிறேன். அம்மாவின் இறப்பில் கற்க வேண்டிய பாடங்கள் சில என சமூக வலை தளங்களில் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று, இரண்டாம் கட்டத்தலைமை இல்லாத கட்சி நிற்காது என்பது.
அப்படியானால், அவர்கள் கண்ணோட்டத்தில் தகுதியான கட்சி தி.மு.க-தானே? தலைவரின் காலத்திலேயே அடுத்த தலைவர் அடையாளம் காட்டப்பட்டது தி.மு.க-வில் மட்டும் தான்.
ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போதும், இறந்த பிறகும் அரசியல் மாச்சர்யங்களைப் பொருட்படுத்தாமல், ஓடிவந்து நின்றார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு என்ன விதமான சங்கடங்கள் வரும் என்று தெரிந்தும் கூட சமாதிக்கும் வந்தார்.
ஜெயலலிதா இறந்தபிறகு அவர் வெளிப்படுத்திய கண்ணியமான பேச்சும் செயலும்தான் எனக்கு அவர் மீது ஈர்ப்பு வரக் காரணமானது.
எதிர் காலத்தில் தி.மு.க-வில் சேர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இல்லை. நான் அங்கிருந்து வந்தவன் தானே. தவிர தி.மு.க-வை எப்போதும் நான் கட்சியாக நினைத்ததில்லை.
கலைஞரை என்றும் நான் சித்தப்பா என்றே அழைப்பேன். தி.மு.க-வுக்கு செல்வது என் வீட்டுக்குத் திரும்பச் செல்வதுபோல்தான்.
நேற்று வரை பதவி, பணம், புகழ் எல்லாம் அனுபவித்து விட்டு நெருக்கடி யான நேரத்தில் கட்சியிலிருந்து வெளியேறு வதை துரோகம் என்று சொல்ல மாட்டார்களா?
காசு பணத்துக்காக, புகழுக்காகக் கட்சி மாற மாட்டான் ராதாரவி. நான் யார் என்பது ஊருக்கே தெரியும். நெருக்கடியான நேரம் தானே தவிர, இன்னமும் ஆளும்கட்சி அ.தி.மு.க தான்.
இன்னும் நான்கு வருடங்கள் அவர்களை அனுசரித்துச் சென்றால் நீங்கள் சொல்கிற பணமும் புகழும் நிறையக் கிடைக்கும்.
அதைச் செய்யாமல் முரண்பட்டு எதிர்க்கட்சித் தலைவரைப் பாராட்டுகிறேன் என்பதிலேயே என் நேர்மை உங்களுக்கு விளங்கும்.
அப்படியும் நான் துரோகம் செய்வதாகத் தோன்றினால் என்னிடம் வந்து கேட்கட்டும். நான் பதில் சொல்லிக் கொள்கிறேன். அப்படி ஒரு சூழல் வரும் போது என் நிலைப்பாட்டை இன்னும் தெளிவாகச் சொல்கிறேன்.
அ.தி.மு.க-வில் இருந்து விரைவில் வெளியேறி விடுவீர்களா?
(சிரிக்கிறார்) முதலில் நான் இப்போது அந்தக் கட்சியில் இருக்கிறேனா என்று கூடத் தெரியாது. அம்மா இறந்ததற்குப் பிறகு எனக்கு உறுப்பினர் அட்டைகூட தரவில்லை.
அதனால், என் உறுப்பினர் எண் காலாவதியாகி விட்டிருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.