உணவே மருந்து’ என்றனர் முன்னோர். ஆனால், மருந்தாக நம்மைக் காக்க வேண்டிய உணவே சில நேரங்களில் ஃபுட் பாய்ஸன் என்ற பெயரால் விஷமாகி விடுகிறது. 


உயிர் காக்கும் உணவு இதுபோல விஷமாக ஏன் மாறுகிறது? இரைப்பை குடலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் கணேஷ் விளக்குகிறார்...

‘‘உயிரினங்களைப் போலவே உணவுக்கும் ஆயுள் உண்டு. சமைக்கப்பட்ட உணவு 5 அல்லது 6 மணி நேரத்துக்குப் பிறகு நுண் கிருமிகளின் ஆக்கிரமிப்பால் கெட்டுப் போகத் தொடங்கும். 

பாக்டீரியாக்களாலும், சில நேரங்களில் வைரஸ்களாலும் ஏற்படும் இந்த நுண்கிருமிகளின் தாக்கம்தான் உணவை விஷமாக்கி விடுகிறது.

கெட்டுப்போன உணவுகளை உண்ணும்போது ஏற்படும் ஒவ்வாமையையே Food poison என்கிறோம்’’ என்று அறிமுகம் கொடுப்பவர், ஃபுட் பாய்ஸனின் அறிகுறிகள் மற்றும் தவிர்க்கும் வழி முறைகளைப் பற்றியும் தொடர்கிறார்...

‘‘வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுவதுதான் பெரும்பாலும் இதன் அறிகுறி. உடல் கதகதப்பாக இருப்பது, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, களைப்பு, அடிவயிற்றில் வலி, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.

ஒரு நாளுக்கு மேல் அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும், வாந்தியும் வயிற்றுப் போக்கும் இருப்பின் உடலில் நீர்ச்சத்து இழப்பு அதிக அளவில் ஏற்படும் என்பதால் சிகிச்சை பெற்றாக வேண்டியது கட்டாயம்.


நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்ட் போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு, புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஃபுட் பாய்ஸன் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

சாதாரணமாக, 2 நாட்களில் குணமாகிவிடும் ஃபுட் பாய்ஸன்கூட இவர்களுக்கு குணமாகாமல் பெரிய சிரமத்தை உருவாக்கிவிடலாம். அதனால், இவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தேவையான மருந்துகளுடன் திரவ உணவு களை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒருநாள் உணவைத் தவிர்த்தாலே பெரும்பாலான ஃபுட் பாய்ஸன் தானாகவே சரியாகிவிடும் . மிதமான ஃபுட் பாய்ஸனாக இருந்தால் 4 நாட்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும். 

காய்ச்சலும் இருந்தால் ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் வயிற்றுப் போக்கு நிற்பதற்கான மருந்துகளும் கொடுக்க வேண்டியிருக்கும். உடலில் சோடியம் அளவு குறைந்திருந்தால் ஐ.வி. என்கிற குளுக்கோஸ் போட வேண்டியிருக்கும்.

கெட்டுப்போன உணவுகளால்தான் ஃபுட் பாய்ஸன் ஏற்படும் என்று இல்லை. சுகாதாரமற்ற தண்ணீரால், சாப்பிட்ட பிறகு போடும் பீடாவால் கூட ஃபுட் பாய்ஸன் ஏற்படலாம். உணவில் கலப்படம் இருந்தாலும் ஃபுட் பாய்ஸன் ஏற்படும்.

பெரும்பாலும் வெளியிடங்களில் சாப்பிடும் உணவுகளால் தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்பதால், வெளியிடங்களில் சாப்பிடும் போது தரமான உணவகங்களில் சாப்பிடுவதே சிறந்தது. 

குளிர்ந்த உணவுகளில் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என்பதால் சாலட் போன்ற குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சூடான உணவுகளே ஓரளவு பாதுகாப்பானவை.

வீடுகளில் தேவைக்கேற்ப மட்டுமே சமைக்க வேண்டும். அதிகமாக சமைத்த உணவு கெட்டுப் போய்விட்டால் அதைக் கொட்டுவதற்கு நமக்கு மனம் வராது. ‘வீணாகிறதே’ என்று அந்த உணவையே சாப்பிட்டு விட்டு, அதன்பிறகு அவதிப்பட வேண்டியிருக்கும். 


உணவில் பூஞ்சைகள் உருவாவதாலும் ஃபுட் பாய்ஸன் ஏற்படுகிறது என்பதால் குளிர்சாதனப் பெட்டி யில் நாள்கணக்கில் வைத்துக்கொண்டு சாப்பிடுவதும் நல்லதல்ல.

காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை நன்றாகக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். 
குழந்தைகள் சுத்தமில்லாத கைகளுடனோ, சுத்தமில்லாத உணவுகளை சாப்பிடுவதாலோ ஃபுட் பாய்ஸனுக்கு அதிகம் ஆளாவார்கள். அதனால் குழந்தைகளிடம் சுகாதாரத்தை வளர்ப்பது அவசியம்.

வெளியிடங்களில் அரசு அதிகாரிகள் இன்னும் அதிகமான சோதனை களை நடத்தி தரமற்ற உணவுப் பொருட்களைக் கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உறுதியான குரலில் முடிக்கிறார் கணேஷ்.


பிரத்யேக உணவியல் நிபுணர், மருத்துவர் என உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டும் சச்சின், கமல்ஹாசன் போன்ற பிரபலங்களே ஃபுட் பாய்ஸனுக்கு ஆளானதாக 

அவ்வப்போது செய்திகளில் படிக்கிறோம். நாம் இன்னும் எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே இதிலிருந்து யோசிக்க வேண்டியிருக்கிறது!

கெட்டுப்போன உணவுகளால்தான் ஃபுட் பாய்ஸன் ஏற்படும் என்று இல்லை. சுகாதாரமற்ற தண்ணீரால், சாப்பிட்ட பிறகு போடும் பீடாவால் கூட ஃபுட் பாய்ஸன் ஏற்படலாம்...