புதிய பிரச்சினைக்கு பழைய அனுபவம் தீர்வல்ல !





புதிய பிரச்சினைக்கு பழைய அனுபவம் தீர்வல்ல !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
சனிக்கிழமை, வீக்எண்ட் மூடில் பிரீயாக இருப்பீர்கள். வாங்களேன் ஒரு ரவுண்ட் தண்ணி விளையாட்டு விளையாடுவோம். ஹலோ, எதற்கு சிப்ஸ் பாக்கெட்டைத் தேடுகிறீர்கள்? `


அந்த தண்ணி’யை சொல்லவில்லை. நாசமா போச்சு. சாதாரண தண்ணீர் கேன்களை வைத்து விளையாட அழைத்தேன்.

உங்கள் முன் மூன்று கேன்கள் இருக்கிறது. பச்சை நிற கேன் 21 லிட்டர் கொள்ளும். 

சிவப்பு நிற கேன் 127 லிட்டர், நீல நிற கேன் 3 லிட்டர் கொள்ளும்.

டாங்கில் டிசம்பர் மாதம் பெய்த மழை நீர் மிச்சம் இருக்கிறது. அதிலிருந்து இந்த கேன்கள் கொண்டு சரியாக நூறு லிட்டர் பிடிக்க முடியுமா உங்களால்?

சிம்பிள் என்கிறீர்கள். சிவப்பு கேனை முழுவதும் நிரப்பினால் அதில் 127 லிட்டர் இருக்கும். அதை பச்சை கேனில் கொட்டினால் 106 லிட்டர் மீதியிருக்கும். அதை நீலக் கலர் கேனில் இரண்டு முறை கொட்டினால் சிவப்பு கேனில் இப்பொழுது இருப்பது நூறு லிட்டர் என்கிறீர்கள்.

சிவப்பு மைனஸ் பச்சை மைனஸ் இரண்டு நீலம் என்கிறீர்கள். பலே, கணக்கு உங்களுக்கு தண்ணி பட்ட பாடு சார்!

இதே கேள்வியை ‘அப்ரஹாம் லூச்சின்ஸ்’ என்ற ஆராய்ச்சியாளர் பலரிடம் கேட்டார். அவர்களும் சரியான பதிலையே கூறினார்கள். அதோடு அவர் நிறுத்தவில்லை. 

இதே போல் விதவிதமான கேன் சைஸ்கள் கொண்டும் கேட்டார். அளவுதான் வெவ்வேறு. பதிலளிக்கும் அணுகுமுறை ஒன்றே. ஆய்வில் கலந்து கொண்டவர்கள் சளைக்காமல் சரியாக பதிலளித்தனர். கடைசியாய் லூச்சின்ஸ் ஒரு கேள்வி கேட்டார்.

பச்சை நிற கேன் 15 லிட்டர் கொள்ளும். சிவப்பு நிற கேன் 39 லிட்டர் கொள்ளும். நீல நிற கேன் 3 லிட்டர் கொள்ளும். இப்பொழுது சரியாக பதினெட்டு லிட்டர் தண்ணீர் வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்?

‘ரொம்ப சிம்பிள். வழக்கம் போல் 39 லிட்டர் சிவப்பு கேனை நிரப்பி அதிலிருந்து பச்சை கேனில் கொட்டினால் 24 லிட்டர் மீதியிருக்கும். அதை இரண்டு முறை நீல நிறக் கேனில் கொட்டினால் போயிற்று. 18 லிட்டர் மீதி இருக்கும்’. இதை தானே கூறுகிறீர்கள். ஆய்விலும் இதையே கூறினார்கள்.

விடை சரி. ஆனால் வழிமுறை சரியல்ல. சுற்றி வளைத்து சொல்கிறீர்கள். கடைசி கேள்விக்கு சிம்பிளான பதில் 15 லிட்டர் பச்சை நிற கேன் தண்ணீரையும் 3 லிட்டர் நீல நிறக் கேன் தண்ணீரோடு சேர்த்தால் 18 லிட்டர்.


எதற்காக சுற்றி வளைத்து மூக்கை தொட்டீர்கள்?

ஏற்கெனவே பதிலளித்த முந்தைய கேள்விகள் போல கடைசி கேள்வி இருந்ததால் அந்த அணுகுமுறை இதற்கும் பொருந்தும் என்று நினைத்ததே காரணம். விடை கரெக்ட். 

சுற்றி வளைத்த அணுகுமுறை தேவையற்றது. இதற்கு `ஐன்ஸ்டெலங் விளைவு’ (Einstellung Effect) என்று பெயர். மாப்பிள்ளை இவரு தான், ஆனா இவரு போட்டிருக்கற சட்டை என்தில்ல என்பது போல!

பெற்ற அனுபவத்தால் மனம் இயந்தி ரத்தனமாக செயல்படும் விதத்தை குறிப்பதுதான் ஐன்ஸ்டெலங் விளைவு. வார்த்தையை கேட்டால் வேற்று மொழியில் 

வீட்டில் உள்ளவர்களை விரசமாய் திட்டுவது போல் இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். ஐன்ஸ்டெலங் என்பதற்கு ஜெர்மன் மொழியில் அமைப்பு, அணுகுமுறை என்று அர்த்தம். 

தீர்வு காண முயற்சிக்கும் பிரச்சினை ஏற்கனவே சந்தித்த பிரச்சினை போலிருந்து அதை எப்படி தீர்த்தோமோ அது போல் புதிய பிரச்சினையை தீர்க்கலாம் என்று நினைக்கும் தவறான அணுகுமுறையை குறிப்பதால் இப்பெயர்.

மனித மூளை அனுபவத்திற்கும் அனுபவத்திலிருந்து கற்ற பாடங் களுக்கும் பெரும் மதிப்பு தருகிறது. அதில் தவறில்லை. ஆனால் பழைய அனுபவங்களைப் போல் தோன்றும் எல்லா விஷயங்களிலும் 

பழைய அணுகுமுறையை கண்மூடித்தனமாய் கடைப்பிடிக்கும் போது பிரச்சினை உருவாகிறது. 18 லிட்டர் பக்கெட்டை சுற்றி வளைத்து கொட்டிய பதிலைப் போல!

ஒரு சினிமா ஹிட்டானால் படத்தின் டைரக்டர் அதே போல் தன் அடுத்த படங்களை எடுத்து நம் உயிரையும் சேர்த்து எடுப்பதும் ஐன்ஸ்டெலங் விளைவால்தான். அந்த படம் ஓடியது என்பதற்காக மற்ற டைரக்டர்களும் அதே பாணியில் படம் எடுக்கத் துவங்குவதும் இதன் கைங்கர்யத்தில் தான்.

இவ்வளவு ஏன், கட்டுரையின் ஆரம்பத்தில் உங்களை தண்ணீர் விளையாட்டு விளையாட அழைத்த போது தண்ணீர் விளையாட்டு என்ற கேட்ட மாத்திரம் சிப்ஸ் பாக்கெட் எடுக்க தோன்றியதும் சாட்சாத் ஐன்ஸ்டெலங் தாக்கத்தில் தான்!

அதற்காக அனுபவத்தை தூக்கிக் குப்பை தொட்டியில் போட வேண்டிய தில்லை. அனுபவம் அருமையான ஆசான் தான். அதற்காக பழைய பிரச்சினைகளை அணுகியது போல 


எல்லா பிரச்சினைகளையும் அணுகுவது சரியாக இருக்காது என்று கூறுகிறேன். எல்லா கேள்விகளுக்கும் ஒரே மாதிரி பதிலளிக்க தேவையில்லை என்று சொல்கிறேன்.

சந்தைகள் வேகமாக மாறி வருகின் றன. வாடிக்கையாளர்கள் அதிவேகமாக தேறி வருகிறார்கள்.

புதிய போட்டிகள். புதிய பிரச்சினைகள். புதிது புதிதாய் நிகழ்வுகள் காணும் வாழ்க்கை வாழ்கிறோம். வியாபாரம் செய்கிறோம். 

பெற்ற அனுபவத்தை அதிலிருந்து கற்ற அறிவை ஒரு பக்கம் வையுங்கள். புதிய பிரச்சினைகளின் தன்மையை புதியதாய் பாருங்கள். பழைய கண்ணோட்டத்தோடு காணாதீர்கள். 

புதிய கேள்விகளுக்கு புதிய அணுகுமுறை வேண்டியிருக்கலாம். புதிய தீர்வுகள் தேவைப்படலாம். பெற்ற அனுபவத்தோடு ஐன்ஸ்டெலங் விளைவையும் மனதில் வைத்து பிரச்சினையை அலசுவது உசிதம்.

பழைய பிரச்சினைகளைத் தீர்த்த முறையையே கண்மூடித்தனமாக எல்லாவற்றிற்க்கும் பின்பற்றினால் பிரச்சினைக்கு புதிய முறையில் இன்னமும் சிறப்பான தீர்வு முறைகள் மனதிற்கு புலப்படாமலேயே போகும்.

பல வருடங்களுக்கு முன் `சர்ஃப்’ டிடர்ஜெண்டிற்கு போட்டியாக ‘நிர்மா’ வந்தது. புதிய போட்டியை அதிக விளம்பரம் மூலம் போட்டுத் தள்ளலாம் என்ற பழைய சிந்தனையோடு சர்ஃப் தன் 

விளம்பரத்தை கூட்டி பழைய ரூட்டிலேயே பயணித்தது. அது பத்து பைசா பயன் தராமல் நிர்மாவின் விற்பனை பிய்த்துக்கொண்டு வளர்ந்து பத்தாததற்கு சர்ஃபையே துவைத்து காயப்போட்டது.

பல கால பிரயத்தனத்திற்குப் பிறகே தன் பழைய அணுகுமுறையை பிரயோகித்தது தவறு என்பதை சர்ஃப் உணர்ந்தது.


விலை குறைவான நிர்மா வளர்ச்சியை ப்ரீமியம் பிராண்டான தன் சர்ஃப் மூலம் தடுக்க முடியாது என்று விலை குறைவான ‘வீல்’ என்ற புதிய டிடெர்ஜெண்ட் பிராண்டை அறிமுகப்படுத்தியது. 

இப்புதிய அணுகுமுறை சர்ஃப்பை காப்பாற்றி, நிர்மாவின் வளர்ச்சியைத் தடுத்தது.

அதோடு வீல் விற்பனை பெருகி இன்று நிர்மாவை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு வளர்ந்தி ருக்கிறது!

ஐன்ஸ்டெலங் தாக்கத்தை தடுக்க உங்கள் செயல்களை, திட்டங்களை, முயற்சிகளை விருப்பு வெறுப்பின்றி புதிய கோணத்தில் அணுகி உங் களை கேள்வி கேட்டு தடுத்து நிறுத்தும் திறனுள்ள மார்க்கெட்டிங் ஆலோசகரை நியமியுங்கள். 

அதற்காக பிடித்தவர்கள், நீங்கள் சொல்வதற்கு ஆமாம் போடுபவர்களை நியமித்து தொலைத்தால் ஐன்ஸ்டெலங் விளைவில் மீண்டும் விழுந்து பட்டுக்கொள்வீர்கள்.

பிறகு பட்டுக்கொண்ட சோகத்தை மறக்க தண்ணீர் விளையாட்டு விளையாட வேண்டியிருக்கும். இம்முறை கேன் கொண்டு அல்ல, பாட்டில் கொண்டு!
Tags: