மகாமகத்திற்காக டாஸ்மாக்கை ஒருநாள் கூட மூடாத அரசு !

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆனால் மகாமகம் துவங்கிய
முதல் நாளான இன்றும் அரசு அதிகாரிகள் பொறுப்புணர்ச்சியோடு டாஸ்மாக் கடைகளை திறந்திருந்தது பக்தர்களை முக சுளிப்புக்குள்ளாக்கியது. 

குரு சிம்மராசியில் இருக்கும்போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் வலம் வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மகாமகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளகஸ்திரேஸ்வர், சோமேஸ்வரர் உள்ளிட்ட 6 கோயில்களில் இன்று காலை மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், 

திருவாவடுதுறை, காஞ்சி மடாதிபதிகள் உள்ளிட்ட ஆதீனங்கள் கொடியை ஏற்றி வைத்து மகாமகத்தை துவங்கி வைத்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் டி. ராஜேந்தர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து மகாமக குளத்தில் பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி அளிக்கப்பட்டது. அதன்பிறகு அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் மகாமக குளத்தில் இறங்கி நீராடினர். 

பக்தர்கள் பயன்பெறும் வகையில் அன்னதானங்கள், மருத்துவ குழு, இருசக்கர வாகனத்தில் 108 ஆம்புலன்ஸ் உதவி, பொதுக்கழிப்பிடங்கள், பக்தர்கள் தங்கி இளைப்பாருவதற்கு தங்கும் இடம்,

பக்தர்களின் நெருக்கடிகளை சமாளிக்க தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மடாதிபதிகள், சிவாச்சாரியர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகிய புனித நீராடினர். 

அதைத்தொடர்ந்து பக்தர்கள் பெரும்பாலானோர் ஆர்வமுடன் மகாமக குளம், பொற்றாமறை குளம், கவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர். அமைச்சர்களும் மகாமக குளத்தில் உள்ள திருத்தலங்களில் நீரை வாரி இரைத்து நீராடி வழிபட்டனர். 
மகாமக குளத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை புனித நீராடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னதானம் வழங்கும் இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு பின்னர் அன்னதானத்தை சோதித்து பார்த்தனர்.

வைணவ கோயில்களான சக்கரபாணி, சாரங்கபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, ஆதிவராக பெருமாள் உள்ளிட்ட 5 சன்னதிகளில் நாளை காலை 8.30 மணி முதல் 9.30 மணி முதல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

விழாவை தொடர்ந்து 8ம் நாளான வரும் 20ம் தேதி 48 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 10ம் நாளான 22ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. 

தீர்த்தவாரி முடிந்ததும், மகாமக குளக்கரையில் உள்ள அபிமுகேஸ்வரர் கோயில் சன்னதி எதிரே 25 வேதவிற்பன்னர்கள் மற்றும் 12 ஓதுவார்கள், வேதபாராயணம் படிக்க

பக்தர்கள் புனித நீராடுவார்கள் என விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், விஸ்வநாதர், காசி விஸ்வநாதர், ஏகாம்பேஸ்வரர் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும் என்கிறார்கள் பக்தர்கள். 

விஷ்வ இந்து பரிஷத் சார்பாக மகாமக சார்பில் காவி கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மகாமகத்திற்கு பக்தர்களின் பயன்பாட்டிற்கு வழிகாட்டுதலுக்காக சேவை மையத்தை பொன் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். காவல்துறையினர் அதிகமாக குவிக்கப்பட்டிருந்தனர். 

காவல்துறை வாகனங்களும், அரசு அதிகாரிகளின் கார்கள் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குளத்திற்கு குளிக்க வருபவர்களுக்கு இடையூறாக இருப்பதாக பொதுமக்கள் பக்தர்கள் தெரிவித்தனர். 
குடிநீர் தொட்டி குறைவாக இருக்கிறது. அதை அதிகப்படுத்த வேண்டும், தற்காலிக கழிப்பறை குறைவாகத்தான் இருக்கிறது, அதை அதிகப்படுத்த வேண்டும்.

கோயில்களுக்கு எதிரே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றவேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை முன்கூட்டியே வைத்தனர். 

அகற்றுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், முதல்நாளான இன்றும் டாஸ்மாக் கடைகள் திறந்தே இருந்தன. மிக முக்கியமான நாளான இன்றும் அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தது பக்தர்களை முகம் சுளிக்கவைப்பதாக இருந்தது.
Tags: