ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு.. அனைத்து தரப்பு வாதம் நிறைவு !

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்துள்ளது. எனவே தீர்ப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுள்ளது. இதற்கு வரும் செவ்வாய்க்கிழமை விடை தெரியலாம். 
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை, கர்நாடக ஹைகோர்ட் ரத்து செய்தது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. 

முதலில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி போன்ற குற்றச்சாட்டுக்குள்ளானோர் தரப்புக்கு வாதிட அனுமதி தரப்பட்டது. மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கர்நாடக அரசுத் தரப்பில் பி.வி.ஆச்சார்யா வாதத்தை முன் வைத்தார். 

முன்னதாக கர்நாடகா தரப்பில் தாவேவும் வாதிட்டார். இதையடுத்து மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதியான இன்றும் விசாரணை நடந்தது. ஆச்சாரியா தொடர்ந்து வாதிட்டார்.

அடுத்து, பிற்பகலில், வருமான வரித்துறை சார்பில் அதன் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. இதன்பிறகு சுப்பிரமணியன் சுவாமி எழுத்துப்பூர்வ வாதத்தை சமர்ப்பித்தார். இதை தொடர்ந்து, வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தது. 

வழக்கில் தொடர்புள்ள நிறுவனங்கள் தங்களை விடுவிக்க கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் விசாரணைக்கு பிறகு தீர்ப்பு எப்போது என்ற விவரம் தெரியவரும்.
Tags: