படியில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டை ரத்து !

சென்னை மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று வருவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிப் போய்விட்டது.
சென்னையில் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட பஸ்களிலோ அல்லது தனியார் வேன்களிலோ, பள்ளிக்குசென்று விடுவார்கள்.

ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களோ, பள்ளிக் கூடம் செல்வதற்கு மாநகர அரசு பஸ்களையே நம்பி உள்ளனர்.

காலையில் பள்ளிக்கூடம் செல்லும் போதும், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும், பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் திகில்பயணத்தையே மேற்கொள்கின்றனர். சென்னையில் அனைத்து மாநகர பேருந்து வழித்தடங்களிலுமே இதனை கண் கூடாக பார்க்க முடிகிறது

இது போன்ற நேரங்களில், படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் தாம்பரத்தில் பஸ்சில் தொங்கிய படியே பயணம் செய்த சுரேஷ் என்ற பிளஸ்-2 மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார். கடந்த 2012-ம் ஆண்டு, தி.நகர், மற்றும் வேளச்சேரியில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். 

படிக்கட்டில் தொங்கிக்கொண்டே பயணம் செய்த இவர்கள் மீது லாரி மோதியது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இது போன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

முதுகில் புத்தகப்பையை தொங்க விட்டுக்கொண்டே படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்யும் போது சாலையில் செல்பவர்களும் பாதிக்கப் படுகிறார்கள் நடந்து செல்பவர்கள், 

சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது மாணவர்கள் மோதி விடுகின்றனர். இது போன்ற நேரங்களில் சாலையில் செல்பவர்களும் கீழே தவறி விழுகிறார்கள்.

இப்படி மாணவர்களின் படிக்கட்டு பயணம், அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீசாரும் சாலைகளில் நின்று மாணவர்களை எச்சரித்து பஸ்சுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

பஸ்டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களும் மாணவர்களை தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் மாணவர்களின் படிக்கட்டு பயணம் மட்டும் முடிவுக்கு வராமலேயே உள்ளது.

இதையடுத்து படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் பயண அட்டையை ரத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளி கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன், அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

இதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டையை ரத்து செய்ய அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல பள்ளிக் கூடங்களில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்தை கூட்டி, போக்குவரத்து போலீசார் மூலம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும் நடவடிக்கை மேற் கொள்ளபட்டுள்ளது. 

கல்விதுறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் இனி பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings