ஏர் இந்தியா விமானம் தாமதத்தால் அமைச்சர் வெங்கய்ய நாயுடு தனது பயணத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மத்திய நகர்ப்புற அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஹைதராபாத்தில் முக்கிய கூட்டம் ஒன்றில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.
இதற்காக நேற்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்துக்கு அவர் வந்தார். ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட வேண்டும்.
ஆனால், விமானி குறித்த நேரத் துக்கு வராததால் அந்த விமானம் காலதாமதமானது. பிற்பகல் 1.45 மணி வரை அமைச்சர் காத்திருந் தார். ஆனால் விமானி வந்து சேரவில்லை. இதனால் அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.
இதுகுறித்து வெங்கய்ய நாயுடு ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
இது போட்டி நிறைந்த காலம். இதை ஏர் இந்தியா நிறுவனம் உணர்ந்திருக்கும் என்று நம்பு கிறேன். விமான கால தாமதத்தால் முக்கியமான கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
இது போன்ற காலதாமதங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது: விமான தாமதத் தால் பயணிகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரி வித்துக் கொள்கிறேன்.
சம்பந்தப் பட்ட விமானி டெல்லி போக்கு வரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட தால் அவரால் குறித்த நேரத்துக்கு வரமுடியவில்லை. இதுகுறித்து உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
ஏர் இந்தியா சார்பில் 74.3 சதவீத விமான சேவைகள் மட்டுமே குறித்த நேரத்துக்கு இயக்கப்படுகின்றன. அதேநேரம் தனியார் நிறுவனமான ஏர் ஏசியா 90.2 சதவீத சேவைகளை சரியான நேரத்தில் இயக்குகிறது.
காலதாமதம் தொடர்பாக அரசு நிறுவனமான ஏர் இந்தியா மீது ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன.