காற்றழுத்தத் தாழ்வு தென் தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை !

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து நகர்ந்து வருவதால் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
அதேசமயம், வட மற்றும் மத்திய தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 20ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (இது மேலும் வலுவடைந்தால் புயலாக மாறும்) மாறி தமிழகத்தின் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. 

இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அனேக இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடக்கு மற்றும் மத்திய தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக மழை பெய்யும். 

ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் 20ம் தேதி வரையிலும், கேரளாவில் 21ம் தேதி வரையும் மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 10 செ.மீ. மழையும், ராமேஸ்வரத்தில் 9 செ.மீ மழையும், பாம்பனில் 8 செ.மீ., நாகையில் 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
Tags:
Privacy and cookie settings