உளுந்தூர் பேட்டையில் திமுக, அதிமுக !

உளுந்தூர்ப்பேட்டையை திமுக மற்றும் அதிமுகவின் கோட்டை என்று கூறலாம். அந்த அளவுக்கு இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே கடந்த 1977ம் ஆண்டு முதல் இதுவரை இந்த இரு கட்சிகள் மட்டுமே இங்கு மாறி மாறி வென்று வந்துள்ளன.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தல் வரை இது தனித் தொகுதியாக இருந்தது. 2011 தேர்தல் முதல் இது பொதுத் தொகுதியாகியுள்ளது.

தலித் சமூகத்தினரும், வன்னியர்களுக்கு இணையாக இங்கு வலுவாக உள்ளதால் இங்கு எப்போதுமே போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் திமுகவும் சரி, 

அதிமுகவும் சரி இதுகாலம் வரை விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு வங்கியை வைத்து இங்கு கதாகலாட்சேபம் செய்து சமாளித்து விட்டன.

ஆனால் இந்த முறை வலுவான தலித் வாக்கு வங்கியின் பின்புலத்துடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இங்கு களம் கண்டுள்ளதால் போட்டி மேலும் இறுகியுள்ளது. இந்த நிலையில் பாமக சார்பில் தெரிந்த முகமான வழக்கறிஞர் பாலுவை இங்கு களம் இறக்கியுள்ளது அக்கட்சி.

உளுந்தூர்ப்பேட்டையில் 1977ம் ஆண்டு முதல் திமுக மற்றும் அதிமுகதான் மாறி மாறி ஜெயித்து வருகின்றன.

1977ல் நடந்த தேர்தலில் திமுகவின் துலுக்கானம் இங்கு வெற்றி பெற்றார். 2 வது இடத்தை அதிமுகவின் சத்தியவாணி முத்து பெற்று தோல்வி அடைந்தார்.

1980ம் ஆண்டு தேர்தலில் திமுக இத்தொகுதியை தக்க வைத்தது. அக்கட்சியின் ரங்கசாமி வெற்றி பெற்றார். அதிமுகவின் கரு நடேசன் 2வது இடத்தைப் பெற்றார்.

1984ல் அதிமுக மீண்டும் இத்தொகுதியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் ஆனந்தன் வெற்றி பெற, திமுகவின் வரதராஜு 2வது இடத்தைப் பிடித்தார்.

1989 தேர்தலில் திமுக மீண்டும் இங்கு வென்றது. அக்கட்சியின் அங்கமுத்து வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் செல்வராஜ் 2வது இடத்தைப் பிடித்தார். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது.

1991ல் நடந்த தேர்லில் மீண்டும் திமுக அதிமுக நேரடியாக மோதின. அதில் அதிமுகவின் ஆனந்தன் வென்றார். திமுகவின் மயில்வாகணன் 2வது இடத்தைப் பிடித்தார்.

1996ல் நடந்த தேர்தலில் திமுகவின் மணி வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைத்தார். அதிமுகவின் ஆனந்தன் தோல்வி அடைந்து 2வது இடமே பெற்றார்.

2001ல் நடந்த தேர்தலில் அதிமுகவின் ராமு வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசு 2வது இடத்தைப் பெற்றார்.

2006ல் நடந்த தேர்தலில் திமுகவின் திருநாவுக்கரசு வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விஜயராகவன் 2வது இடத்தைப் பிடித்தார். இந்த தேர்தலில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் இங்கு 2வது இடம் வரை முன்னேற முடிந்தது குறிப்பிடத்தக்கது.

2011ல் நடந்த தேர்தலில் அதிமுகவின் குமரகுரு வெற்றி பெற்றார். 2வது இடம் மீண்டும் விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கிடைத்தது. அக்கட்சியின் முகம்மது யூசுப் 2வது இடத்தில் வந்து தோல்வி அடைந்தார்.

இப்படி உளுந்தூர்ப்பேட்டை தொகுதி கடந்த 1977ம் ஆண்டு முதல் மாறி மாறி திமுக, அதிமுகவிடமே இருந்து வருகிறது இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் இங்கு அதிமுக, திமுக, தேமுதிக, பாமக என நான்கு முனைப் போட்டி எழுந்துள்ளது. 

நால்வருமே கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளதால் விஜயகாந்த் வெல்வாரா அல்லது மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது பெரும எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings