தமிழக அரசியலில் காமெடியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்று நடிகரும், அதிமுக விசுவாசியுமான ராமராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங் குன்றத்தில் அ.தி.மு.க சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய நடிகர் ராமராஜன், "எம்.ஜி.ஆருடன் விஜயகாந்தை ஒப்பிட்டு பிரேமலதா பேசகிறார்.
யாருடன் யாரை ஒப்பிட்டு பேசுவது. தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தவர் கூட தமிழ் நன்றாக பேசுகின்றனர். விஜயகாந்த் பேசும் தமிழ் புரியவில்லை.
கூட்டம் கூடினால் மட்டும் போதுமா. மக்கள் ஏற்று கொள்ள வேண்டாமா. கணவர் உடல்நிலை சரியில்லை. அவருடன் இருந்து கவனிக்காமல் பிரேமலதா ஊர் ஊராக பிரசாரம் செய்கிறார். எதிர் கட்சிகள் குழப்பத்தில் உள்ளனர்.
எத்தனை தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற முடியும் என அவர்களால் கூற முடியுமா. சினிமாவில் தான் காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். தற்போது அரசியலிலும் அதிக காமெடிகள் நடக்கின்றன.
முதிர்ந்த அரசியல்வாதி வைகோ, அவர் விஜயகாந்த் தலைமையை ஏற்கிறேன் என்கிறார். வெட்கமாக இல்லையா. எதிர் கட்சிகளுக்கு தனித்து நிற்க துணிச்சல் உண்டா. கூட்டணிக்காக ஓடுகின்றனர்.
முதல் நாள் தனித்து போட்டி என்கிறார் விஜயகாந்த். மறு நாள் கூட்டு சேருகிறார்.
இன்னும் கூட கூட்டணிக்காக அலைகிறார் கருணாநிதி. ஸ்டாலினை காமெடி பீஸ் என்கிறார் அழகிரி. ஊர் ஊராக ஸ்டாலின் வேஷம் போடுகிறார்.
ஸ்டாலினையும், அழகிரியையும் சேர்த்து வைக்க கருணாநிதியால் முடியவில்லை. அரசியலை விட்டு கருணாநிதி விலக வேண்டும். எதிர் கட்சிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை என்று தெரிவித்தார்.