ஐந்து ஆண்டுகளாக ஜெயலலிதா தூங்கிக் கொண்டிருந்தாரா?

ஐந்து ஆண்டு காலமாக தமிழக முதலமைச்சர் என்ன தூங்கிக் கொண்டி ருந்தாரா? மக்களை ஏமாற்றவே நிதிநிலை அறிக்கை யில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி யுள்ளார். 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழக அரசின் 2016 – 2017 இடைக்கால நிதிநிலை அறிக்கையைப் பொறுத்த வரையில், கடந்த 5 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் தொகுப்பாகவும், 

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை புகழ்பாடியும், பாராட்டியும் உள்ள கட்டுரை தொகுப்பாகத்தான் பார்க்க முடிகிறதே தவிர,

இதில் வேறு எந்த முக்கிய அம்சமும் இருப்பதாக தெரியவில்லை. மாநில அரசின் வரி வருவாய் ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படுவதைவிட குறை வாகத்தான் வந்துள்ளது. 

அதேபோல் இந்த ஆண்டும் 9,158.78 கோடி ரூபாய் வரி வருவாய் குறைவாகத்தான் வந்துள்ளது. இந்த ஆண்டும் மாநில அரசின் வரி வருவாயை வழக்கம்போலவே செயற்கையாக அதிமுக அரசு உயர்த்திகாட்டியுள்ளது. 

கடந்தாண்டுகளில் மதிப்பிடப்பட்ட வரிவருவாயும், உண்மையாக கிடைத்த வரிவருவாயும், ஆட்சியாளர்களின் வசதிக்கேற்ப இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு தெளிவாக கூறப்படவில்லை. கடந்த 01.02.2016 அன்று “அரசு கஜானா காலியாகிவிட்டதா?” என தலைப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தேன். அது தற்போது உண்மையாகியுள்ளது. 

தனது ஆட்சியின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது நிர்வாக திறமையின்மையால், நிதி நிர்வாக சீர்கேட்டின் விளைவாக தற்போது தமிழகத்தில் 36,740 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடி ரூபாய் கடனையும் வைத்துள்ளார். 

அதற்கு வட்டியாக ஒவ்வொரு ஆண்டும் 21,304 கோடி ரூபாய் செலுத்தும் நிலையை உருவாக்கியுள்ளார். அரசு கஜானாவை காலியாக்கிவிட்டு, ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த கஜானாவை நிரப்பிக்கொண்டு ஆட்சியை விட்டு வெளியேற இருக்கிறார்கள். 

மேலும் பொதுத்துறை நிறுவனங்களான மின்சாரம், போக்குவரத்து போன்ற பல நிறுவனங்களில் ரூபாய் 2 லட்சம் கோடிக்குமேல் கடன் நிலுவையில் உள்ளது. ஆகமொத்தத்தில் தமிழகத்தை நிர்மூலமாக்கிவிட்டு இந்த ஆட்சி வெளியேறுகிறது. 

இதுதான் ஜெயலலிதாவின் ஐந்தாண்டு சாதனையாகும். மேலும் நிதிநிலை அறிக்கையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத்தான் கூறப்பட்டுள்ளது. 

இதிலிருந்தே ஒரு ரூபாய் முதலீடுகூட தமிழகத்திற்கு இதுவரையிலும் வந்து சேரவில்லை என்ற உண்மையை அதிமுக அரசு ஒத்துக்கொண்டுள்ளது.

தொழில் வளர்ச்சிக்காகான முதலீடுகளை, தங்களின் சுய விளம்பரத்திற்காக அல்லாமல், ஆக்கப் பூர்வமாக மாநிலங்களின் வளர்ச்சிக்கு செயல்படுத்துவது எப்படி என்பதை ஹரியானா, ஆந்திரா, மற்றும் கர்நாடக மாநிலங்களின் முதலமைச்சர்களை பார்த்தாவது ஜெயலலிதா தெரிந்துகொள்ளவேண்டும். 

2011ல் தமிழகத்தில் நிலவி வந்த மின்சாரப் பற்றாக்குறையை, திறம்படக் கையாண்டதால், தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாக கூச்சம் சிறிதுமின்றி சொல்லியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. 

மின் உற்பத்தியை அதிகரித்து இந்த நிலைக்கு கொண்டுவந்திருந்தால், ஜெயலலிதா அரசு வழக்கம்போல் தற்பெருமை கொள்ளவும், தம்பட்டம் அடித்துக் கொள்ளவும் செய்யலாம். 

ஆனால் தனியார் மின்நிலையங்களில் ஆட்சியாளர்களின் ஆதாயத்திற்காக, அதிக விலைகொடுத்து மின்சாரத்தை வாங்கிவிட்டு, எதற்கு இந்த தம்பட்டமும், தற்பெருமையும்? 

இப்படி சொல்லவெட்கமாக இல்லையா? பொதுவிநியோக திட்டத்திற்கு புதிய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக “ஸ்மார்ட்கார்டு” வழங்கப்படுமென அறிவித்த அறிவிப்பே என்னவானதென தெரியவில்லை. 

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அனைத்து குடும்பங்களுக்கும் தினசரி தலா 20 லிட்டர் வழங்குவதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறி, ஐந்தாண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னையில் மட்டும் இத்திட்டம் துவக்கப்படும் என்று அறிவித்து, 


அதற்கும் “ஸ்மார்ட்கார்டு” வழங்கப்படும் என்பது நகைப்பிற்குரியதாகும். மக்களை ஏமாற்றவே இதுபோன்ற அறிவிப்புகள் என மக்களே கூறுகிறார்கள்.

இந்த நிதிநிலை அறிக்கையில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு 1,862 கோடி ரூபாய் செலவில் விரிவான திட்ட அறிக்கை 2011ஆம் ஆண்டே தயாரிக்கப்பட்டதென்றும், தற்போது அதை உடனடியாக செயல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழக முதலமைச்சர் என்ன தூங்கிக்கொண்டிருந்தாரா? மக்களை ஏமாற்றவே நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் அப்பகுதி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். 

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதுபோல, அப்பகுதி மக்களின் வாக்கு வங்கியை மனதில் கொண்டு இதுபோன்ற ஏமாற்று அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆகமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை, மக்களை ஏமாற்றும் மோசடி நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறை, வணிகவரித்துறை, மருத்துவத்துறை, கல்லூரி பேராசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கூட்டுறவு பணியாளர்கள் என தொடர்ந்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இதுவல்லாமல் மாற்றுதிறனாளிகள், விவசாயிகள், விசைத்தறியாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆங்காங்கே தங்களுடைய பல்வேறு பிரச்சனைகளுக்காக தமிழகம் முழுவதும் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செய்ய முடியாத திட்டங்களையெல்லாம், செய்யப்போவதாக கூறி, மீண்டும் அறிவிப்பு அரசியலை ஜெயலலிதா அரங்கேற்றுகிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings