'காதல் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது' சங்கரின் தந்தைக்கு மிரட்டல் !

உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் தந்தைக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருப்பூர் மாவட்டம், குமரலிங்கத்தை சேர்ந்த வேலுசாமி என்பவருடைய மகன் சங்கர் (22) பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அவர் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த கவுசல்யாவை(19) காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 13ம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க நின்றபோது சங்கர் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இதில் காயம் அடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை தொடர்பாக உடுமலை காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம், பட்டுவீரன்பட்டியில் தலைமறைவாக இருந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

கவுசல்யாவின் தந்தை பழனியை சேர்ந்த சின்னசாமியும் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சங்கர் படுகொலையை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் சங்கரின் வீடு உள்பட குமரலிங்கம் நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் சங்கரின் தந்தை வேலுசாமியின் பெயரில் அவருடைய வீட்டுக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. 

அனுப்புனர் முகவரியில் எஸ்.அலாவுதீன், ஒன்னிப்பாளையம், காரமடை, கோவை மாவட்டம் என்று இருந்தது.அந்த கடிதத்தில், உன்ற மகன் உயிர் போனது போனது தான்.

2வது மகனையாவது ஒழுங்கா வளர்த்து சாதியில் பெண் கட்டி வை. உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது. இதெல்லாம் அமெரிக்கா, லண்டன், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்த காதல் ஒத்துவரும். இது இந்தியாவுக்கு ஒத்துவராது. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. 

நியாயம் நம்ம பக்கம் இருந்தாலும் யாரும் சப்போர்ட் செய்ய மாட்டார்கள். நடக்கிற சம்பவம் நடந்துவிட்டது. அவுங்க அப்பாவும் 7 வருடம் ஜெயிலுக்கு போவாரு. விட்டுத்தள்ளு.

இப்படிக்கு அலாவுதீன்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. வேலுசாமி அந்த கடிதத்தை குமரலிங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அனுப்புனர் முகவரி மற்றும் தபால் முத்திரை பதிவான நாள் உள்ளிட்ட விவரங்களை வைத்து அந்த கடிதம் எங்கிருந்து வந்தது? 

அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கரின் தம்பி விக்னேஷ்வரன்(19) கூறுகையில், "எனது அண்ணன் இறந்த துக்கத்தில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை.

அதற்குள் எனது தந்தை பெயருக்கு வந்த கடிதம் எங்களை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது. எனது அண்ணி (கவுசல்யா) சிகிச்சை முடிந்த பின்னர் எங்களுடன் தான் சேர்ந்து வாழ இருக்கிறார். 

அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போது இன்னும் பிரச்னைகள் வரும் என்று பயமாக உள்ளது. போலீசார் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றார்.
Tags:
Privacy and cookie settings