ஆசிரியையுடன் தலைமறைவான மாணவன் தாயுடன் செல்ல விருப்பம் !

தென்காசியில் ஆசிரியை கோதைலட்சுமியால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவர் சிவசுப்பிரமணியன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அவர் தனது தாயுடன் செல்ல விரும்புவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். தென்காசியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வந்த காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலட்சுமி (23). 

அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் மகன் சிவசுப்பிரமணியனுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாயமானார்.

இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தங்களின் மகனை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கூறி மாணவனின் தாய் மாரியம்மாள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மாணவனும், ஆசிரியையும் புதுச்சேரியில் திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்தது தெரிந்து போலீசார் அவர்களை கடந்த 10ம் தேதி கண்டுபிடித்து புளியங்குடிக்கு அழைத்து வந்தனர்.

மாணவனை தன்னிடம் இருந்து பிரித்தால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கோதைலட்சுமி தெரிவித்தார். போலீசார் கோதைலட்சமி மற்றும் மாணவனை தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினார்கள்.

நீதிபதி கோதைலட்சுமியை 15 நாள் சிறை காவலிலும், மாணவனை கூர்நோக்கு இல்லத்திலும் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலட்சுமி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு சிறையில் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க வசதி இல்லாத காரணத்தால் அவர் திருச்சியில் உள்ள மகளிர் சிறைக்கு மாற்றப்பட்டார். மாணவன் நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.
Tags: