கூட்டணியில் காங். இருந்தாலும் பரவாயில்லை !

யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஒருவழியாக தங்களுக்கான தென்னந்தோப்பு சின்னத்தை அறிவித்திருக்கிறார். 


அத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் அதைப் பற்றி கவலைப் படமாட்டோம் எனவும் அறிவித்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணி வேண்டாம்; 

திமுக கூட்டணிக்கு போகலாம் என முடிவு செய்து விட்டாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுக கூட்டணியில் 2 நிபந்தனைகள் த.மா.கா.வுக்கு வைக்கப்பட்டிருந்தது. 

அதாவது 8 தொகுதிகளைத் தருகிறோம்; அதில் உங்கள் சொந்த சின்னத்தில் நின்று கொள்ளுங்கள் அல்லது 12 தொகுதிகளைத் தருகிறோம்; ஆனால் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனைகள். 

ஜி.கே.வாசனைப் பொறுத்தவரையில் குறைந்தது 25 தொகுதிகள்; சொந்த சின்னத்தில்தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இதனாலேயே 2 முறை ஜெயலலிதாவுடனான அவரது சந்திப்பும் ரத்தாகி இருந்தது.

தற்போது திடீரென தங்கள் கட்சிக்கான சின்னமான தென்னந்தோப்பை ஜி.கே.வாசன் அறிவித்திருக்கிறார். நிச்சயமாக சொந்த சின்னத்துடன் ஜி.கே.வாசன் அதிமுக தரும் 8 தொகுதிகளை ஏற்கமாட்டார் என்கின்றன தமாகா வட்டாரங்கள். 

ஆகையால் இந்த சின்ன அறிவிப்பின் மூலம் அதிமுகவுக்கு தமாகா டாடா பைபை சொல்லிவிட்டதாகத்தான் அர்த்தம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


அதே நேரத்தில் தமாகா, தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு அதன் தலைவர்கள் காத்திருக்கிறார். 124 தொகுதிகளில் போட்டியிட உள்ளது தேமுதிக. 

வாசன் கேட்கும் 25 தொகுதிகளை விட்டுக் கொடுத்தால் ம.ந.கூட்டணியைவிட குறைவான தொகுதிகளில்தான் தேமுதிக போட்டியிட நேரிடும். ம.ந. கூட்டணியில் 110 தொகுதிகளை 

எப்படி சரி சமமாக பிரிப்பது என்பதில் 4 கட்சிகளும் மண்டையை பிய்த்து கொண்டிருக்கும் நிலையில் தமாகா கை கோர்த்தாலும் அக்கட்சி கேட்கும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என்றே வாசன் கருதுகிறார்.

அதே நேரத்தில் திமுகவோ, காங்கிரஸ் கட்சிக்கு 25; தமாகாவுக்கு 25 என்கிற பார்முலாவை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமாகாவை கூட்டணியில் சேர்க்க ராகுல் காந்தி விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 25 தொகுதிகளை ஏற்கவே முடியாது என ஒற்றைக் காலில் நிற்கும் காங்கிரஸுக்கு தமாகாவையும் சேர்க்கும் திமுகவின் முயற்சி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். திமுகவோ 2 காங்கிரஸ் கட்சிகளையும் கூட்டணியில் சேர்ப்போம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.


இது தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஞானதேசிகன், காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியில் த.மா.கா. இடம்பெற வாய்ப்பில்லை என கூறியிருந்தார். 

ஆனால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் வாசன் இதற்கு எதிரான கருத்தை தெரிவித்திருக்கிறார். இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதே... 

அந்த கூட்டணியில் தமாகா இடம் பெறுமா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த வாசன், காங்கிரஸை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். 

நாங்கள் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் போது ஒரு கட்சியைப் பார்த்து முடிவெடுக்கமாட்டோம்; எங்களது கட்சி நலன், மக்களின் நலன் பார்த்து முடிவெடுப்போம் என்றார். 
 
அதாவது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் எங்களுக்கு பரவாயில்லை என்கிற தொனியைத்தான் வாசன் வெளிப்படுத்தியிருந்தார். இது ஞானதேசிகன் தெரிவித்த கருத்துக்கு நேர் எதிரானதாக இருக்கிறது.


இதனால் அவர் திமுக கூட்டணிக்கு சிக்னல் கொடுக்கிறாரோ என்ற யூகமும் எழுந்துள்ளது. திமுகவும் காங்கிரஸ் முரண்டுபிடித்தால் கூட்டணியை விட்டு வெளியேறட்டும்; 

அந்த இடத்துக்கு வாசனின் தமாகாவை உட்கார வைப்போம் என்கிற வகையில் எச்சரிக்கை விடுத்தும் வருகிறதாம் திமுக. இன்னும் எத்தனை காட்சிகள் அரங்கேறுமோ?
Tags:
Privacy and cookie settings