தீவிரவாதி பெட்டியில் பயணித்த ராகவேந்திரன் கணேசன் !

பிரஸ்ஸல்ஸில் தற்கொலைப்படை தீவிரவாதி மெட்ரோ ரயிலில் பயணித்த அதே பெட்டியில் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசனும் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. 
கடந்த 22ம் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 34 பேர் பலியாகினர். மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்ததில் இருந்து பிரஸ்ஸல்ஸில் பணியாற்றி வந்த சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசனை காணவில்லை.

ராகவேந்திரன் கடைசியாக மெட்ரோ ரயிலில் இருந்து தனது தாய்க்கு போன் செய்து பேசியுள்ளார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைப்படை தீவிரவாதி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அதே பெட்டியில் தான் கணேசனும் பயணம் செய்துள்ளார் என்ற விபரம் தற்போது கிடைத்துள்ளது. அவர் கடந்த மாதம் தான் சென்னைக்கும், மும்பைக்கும் வந்துள்ளார்.

கணேசனின் மனைவிக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் சென்னையில் இருக்கும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வந்தார். பின்னர் மும்பை சென்று அங்கு வசிக்கும் தனது தாயை சந்தித்தார். கணேசனின் சகோதரர் ஜெர்மனியில் வசிக்கிறார்.

குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் கணேசன் பிரஸ்ஸல்ஸ் சென்றுள்ளார். குண்டுவெடிப்பில் அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டது. 
பின்னர் பிரஸ்ஸல்ஸ் சென்ற அவரது பெற்றோர் மற்றும் சகோதரரின் உதவியுடன் அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து கணேசன் மாயமானபோதிலும் அவர் எங்கோ பத்திரமாக இருக்கிறார் என்று அவரது குடும்பத்தார் நம்பினர். அவர் இறந்திருக்கமாட்டார் என அவர்கள் கடைசி நிமிடம் வரை நம்பிக்கையுடன் இருந்தனர்.
Tags:
Privacy and cookie settings