லாரி மோதி இரு துண்டுகளாக உடல் போன நிலையிலும், உயிர் பிரியும் முன்பு கண்களை தானம் செய்யுமாறு டாக்டர்களிடம் கூறியுள்ளார் பெங்களூரை சேர்ந்த 23 வயது இளைஞர். 
பெங்களூர் ஒயிட்பீல்டு பகுதியிலுள்ள எஸ்எஸ்எம்எஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர் ஹரிஷ் நஞ்சப்பா (23). 

இவர், பெங்களூர்-தும்கூர் தேசிய நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் நேற்று பயணித்தபோது, ஒரு வாகனத்தை ஓவர்-டேக் செய்ய முயன்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானார். 

லாரியின் அடி பாகத்தில் சிக்கிய ஹரீஷின் உடலின் கீழ் பகுதி தனியாக துண்டிக்கப்பட்டது. இடுப்புக்கு கீழேயுள்ள உடல் பகுதிகள் லாரியால் சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், உடலின் மேல் பாகத்தில் உயிர் இருந்தது.

வலியால் துடித்த ஹரீஷ், உதவி செய்யுமாறு, கையெடுத்து கும்பிட்டுள்ளார். ஆனால் சாலையில் சென்ற பல வாகன ஓட்டிகள் உச்.. கொட்டி பச்சாதாபப்பட்டுக்கொண்டே அங்கிருந்து கடந்து சென்றுள்ளனர். 

சிலரோ, இன்னும் கொடூரமாக, வாகனங்களை நிறுத்தி, போனில் வீடியோ, போட்டோ எடுத்து அதை வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ஷேர் செய்து லைக்ஸ் வாங்கியுள்ளனர். 

இந்நிலையில், ஒரு சில 'மனிதர்கள்' தங்கள் வாகனங்களை நிறுத்தி ஆம்புலன்ஸ், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்பகுதியிலுள்ள டோல்கேட் ஊழியர்கள் தகவல் அறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸை அனுப்பி வைத்தனர். 

இந்த நல் உள்ளங்கள் செய்த உதவியால் விபத்து நடந்த 10 நிமிடங்களுக்குள், அருகிலுள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஹரீஷ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், உடலின் பாதி பகுதி துண்டாகிவிட்டதால் மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. 

இருப்பினும், வேதனைக்கு மத்தியில், தனது கண்களை தானம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை டாக்டர்களிடம் தெரிவித்துவிட்டு இறந்துள்ளார் ஹரீஷ். 

இதையடுத்து டாக்டர்கள் அவரது கண்ணை அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர். இதுகுறித்து, நாராயண நேத்ராலயா மருத்துவமனை சேர்மன் டாக்டர் புஜங்ஷெட்டி கூறுகையில், ஹரீஷின் கண்களை எடுத்து பாதுகாத்து வருகிறோம். 

உடல் பாதியாக துண்டாகி ரோட்டில் விழுந்து கிடந்த ஒரு மனிதரால், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது. 

ஹரீஷ் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரது தலைபகுதியில் அடி படவில்லை. எனவே கண்ணுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு புஜங் ஷெட்டி தெரிவித்தார்.