மகாமக விழாவுக்கு விரிவான ஏற்பாடு.. அமைச்சர் காமராஜ் !

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
மகாமக விழாவுக்கு விரிவான ஏற்பாடு.. அமைச்சர் காமராஜ் !
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த விழா வருகிற 22-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி 22-ந் தேதி நடக்கிறது.

அப்போது ஒரே நேரத்தில் 12 சிவன் கோவில்களின் சாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது கும்பகோணம் மகாமக குளத்தில் மட்டுமே.

அதே போல 5 வைணவ கோவில்களில் இருந்தும் சாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாமக விழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப் படுவதால் மத்திய, 

மாநில அரசுகள் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 
பக்தர்கள் புனித நீராடும் மகாமக குளம் மற்றும் பொற்றாமரை குளங்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று கும்பகோணம் வந்தார். பின்னர் அவர் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். 

பின்னர் அங்கு செய்யப் பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வை யிட்டார். பின்னர் பக்தர்கள் புனித நீராடும் மகாமக குளத்தில் இறங்கி தீர்த்த கிணறுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

தொடர்ந்து பொற்றாமரை குளம், அசூர் மற்றும் தாராசுரத்தில் அமைக்கப் பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கும்பகோணத்தில் நாளை (சனிக்கிழமை) மகாமக விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 22-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
இதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 69 கோவில்கள் ரூ.13 கோடியே 86 லட்சத்தில் திருப்பண¤கள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளன. 

மேலும் மகாமக விழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப் படுவதால் அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, 

கழிவறை வசதி, மின்விளக்கு வசதி, தற்காலிக பஸ் நிலையங்கள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப் பட்டுள்ளன. 

மேலும் பக்தர்கள் புனித நீராடும் மகாமக குளம், பொற்றாமரை குளம், காவிரி ஆறு ஆகியவை சீரமைக்கப் பட்டுள்ளன. மகாமக குளத்தில் குளோரினேசன் செய்யப்பட்ட தண்ணீர் விட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

மகாமக விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், மகாமக குளம், பொற்றாமரை குளம், காவிரி கரையில் புனித நீராடுவதற்கு ஏதுவாக விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
பக்தர்களுக்கு கோவில்களில் அன்னதானம் வழங்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. மகாமக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தமிழக அரசு சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரசேகரன், கும்பகோணம் உதவி கலெக்டர் கோவிந்தராவ், அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன்,

முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், கும்பகோணம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அறிவழகன், நகரசபை துணைத் தலைவர் ராஜாநடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.