பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்தது !

பெங்களூருவில் தனியார் பள்ளிக்குள் ஒரு சிறுத்தை புகுந்தது. அதை பிடிக்க முயன்றபோது கடித்து குதறியதில் வனத்துறை ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்தது !
12 மணி நேரம் போராடி வனத்துறையினர் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை

பெங்களூரு வர்த்தூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பள்ளிக்கு யாரும் வரவில்லை. 

இதனால் காவலாளிகள் மட்டும் வழக்கம் போல பள்ளியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில், காலை 8 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஒரு சிறுத்தை நடமாடுவதை காவலாளி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இது பற்றி அவர், பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். 

அவர்கள் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது அதிகாலை நேரத்தில் ஒரு சிறுத்தை பள்ளிக்குள் புகுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
அந்த சிறுத்தை அதிகாலை 4.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து பள்ளிக்குள் புகுந்திருக்கலாம் என்று தெரிய வந்தது.ஆனால் பள்ளியை விட்டு அந்த சிறுத்தை வெளியே செல்லும் காட்சிகள் எதுவும் கேமராவில் பதிவாகவில்லை. 

இதனால் அந்த சிறுத்தை பள்ளிக்குள் இருப்பதை நிர்வாகிகளும், காவலாளிகளும் உறுதி செய்தார்கள்.

வனத்துறையினர் தேடுதல் வேட்டை

அதைத் தொடர்ந்து, வர்த்தூர் போலீசாருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. 

உடனே போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்து பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

அதே நேரத்தில் பள்ளிக்குள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ந்து ஆய்வு செய்த வண்ணம் இருந்தார்கள். 

அப்போது சிறுத்தை பள்ளிக்குள்ளேயே நடமாடிக் கொண்டிருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தார்கள்.
இதையடுத்து, பள்ளிக்குள் இருந்து சிறுத்தையை வெளியே கொண்டு வர பட்டாசுகள் வெடித்தனர். மேலும் அதை பிடிக்க வலைகளுடனும் வனத்துறையினர் காத்திருந்தார்கள்.

இதற்கிடையில், மதியம் 2 மணியளவில் பள்ளியின் மற்றொரு வாசல் வழியாக சிறுத்தை வெளியே ஓடி விட்டதாக தகவல் பரவியது.

மேலும் அந்த பள்ளியைச் சுற்றி மண்டி கிடக்கும் புதரில் சிறுத்தை சுற்றித் திரிவதாகவும் தகவல் வெளியானது. இதனால் சிறுத்தையை பிடிக்க பள்ளியை சுற்றி கூண்டுகள் வைக்கப்பட்டன.

பொதுமக்கள் திரண்டனர்

இந்த நிலையில், மாலை 4 மணியளவில் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், பள்ளி சுவரில் சிறுத்தை ஏறி குதித்து ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதனால் பள்ளிக்குள் இருந்து சிறுத்தை வெளியே தப்பி ஓடவில்லை என்பதை வனத்துறையினரும், போலீசாரும் உறுதி செய்தார்கள்.
பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை 2 பேரை கடித்தது !
இதற்கிடையில், பள்ளிக்குள் சிறுத்தை புகுந்து இருப்பதாகவும், அருகில் உள்ள புதர் பகுதியில் சுற்றித் திரிவதாகவும் தகவல் பரவியதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு விட்டார்கள்.

மேலும் பள்ளியை சுற்றி வசிப்பவர்கள் தங்களது வீட்டிற்குள் சிறுத்தை புகுந்து விடக்கூடாது என்பதற்காக தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு இருந்தார்கள். 

ஆனாலும் ஏராளமான பொதுமக்கள் பள்ளியின் முன்பு திரண்டு இருந்தார்கள். இதனால் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினருக்கு இடையூறு ஏற்பட்டது. 

அதைத் தொடர்ந்து, பள்ளியில் இருந்து சிறுத்தை வெளியே வந்தால், பொது மக்களை கடித்து விடக்கூடாது என்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.

2 பேர் படுகாயம்

அத்துடன் தனியார் பள்ளியை சுற்றி வேலிகள் போடப்பட்டன. மேலும் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையை பிடிக்கவும் வனத்துறையினர் தயாரானார்கள். 
இந்த நிலையில், பள்ளிக்குள் இருந்து வெளியே வந்த சிறுத்தை அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு வேலிக்குள் சென்றது. 

உடனே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முயன்றனர். மேலும் ஆக்ரோஷம் அடைந்த அந்த சிறுத்தை வனத்துறை ஊழியர்கள் 2 பேரை தாக்கி கடித்து குதறியது.

அந்த சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் சிறிது நேரம் போராடினார்கள். பின்னர் அதிர்ஷ்ட வசமாக அவர்கள் சிறுத்தையின் பிடியில் இருந்து தப்பினார்கள்.

அதே நேரத்தில் வனத்துறையினரும் சிறுத்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் சிறுத்தையின் மீது மயக்க ஊசி படவில்லை. சிறுத்தை பள்ளியில் உள்ள கழிவறைக்குள் ஓடி புகுந்தது. 

அதைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த 2 பேரும் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டனர். அதன் பிறகு, கழிவறைக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தார்கள்.

போராடி பிடித்தனர்
பின்னர் சிறுத்தையை மற்றொரு முறை துப்பாக்கியால் சுட்டு மயக்க ஊசி செலுத்தினர். இதில் பாதி மயங்கிய நிலையில் இருந்த சிறுத்தையை வலையில் பிடித்தனர். 

ஒரு வழியாக 12 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.  கால்நடை மருத்துவர் சிறுத்தையை பரிசோதித்த பின்னர் அதை இரும்பு கூண்டில் அடைத்து பன்னரகட்டா தேசிய பூங்காவிற்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். 

பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags: