தெலுங்கில் ரீமேக்காக இருக்கும் 'தனி ஒருவன்' படத்திலும் சித்தார்த் அபிமன்யு பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அரவிந்த்சாமி. மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'.
ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூலில் இப்படம் பெரும் சாதனை படைத்தது.
இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை திருப்பதி பிரசாத் வாங்கியிருக்கிறார். ஜெயம் ரவி நடித்த வேடத்தில் ராம் சரண் நடிக்க இருக்கிறார். 'கிக்' படத்தின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்க இருக்கிறார்.
அரவிந்த் சாமி நடித்த சித்தார்த் அபிமன்யு வேடத்தில் நடிக்க சுதீப், மாதவன் மற்றும் அரவிந்த்சாமி மூவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். மீண்டும் அதே பாத்திரத்தை பண்ண தனக்கு விருப்பமில்லை என்று அரவிந்த்சாமி ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் சுதீப் அல்லது மாதவன் நடிப்பார்கள் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில், மீண்டும் சித்தார்த் அபிமன்யு பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அரவிந்த்சாமி.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கத்தில் தொடங்க இருக்கிறது. 'தனி ஒருவன்' இந்தி ரீமேக் உரிமைக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தி ரீமேக்கை 'தனி ஒருவன்' இயக்குநர் மோகன் ராஜாவே இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.