பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் 'இது நம்ம ஆளு' திரைப்படம் காதலர் தினத்தன்று வெளியாக இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'இது நம்ம ஆளு'.
குறளரசன் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டி.ராஜேந்தர் வழங்க முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார்.
பாண்டிராஜ் மற்றும் தயாரிப்பாளர் டி.ராஜேந்தர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. விரைவில் இப்படத்தை வெளிக்கொண்டு வர அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தற்போது இப்படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி இருக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம். பொங்கலுக்கு 'கதகளி' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய படங்களை வெளியிட இருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், காதலர் தினத்தன்று 'இது நம்ம ஆளு' படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'இது நம்ம ஆளு' படத்தின் இறுதிகட்ட டப்பிங் பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன. இப்படத்தின் இதர சிறு சிறு பணிகள் முடிக்கப்பட்டு, விரைவில் பாடல் படப்பிடிப்பும் நடைபெற இருப்பதாக படக்குழு தெரிவித்தது.
இப்படத்தின் டீஸர் மற்றும் உருவான விதம் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. விரைவில் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.