3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல் !

வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலை மற்றும் மண்டலங்கள் காரணமாக தமிழகம் அதிகளவு மழை பொழிவை பெறுகிறது.
ஆண்டு மழையில் சராசரியாக 48 சதவீதம் இந்த பருவமழை காலத்தில் கிடைப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தாண்டு வழக்கத்தை விட சற்று தாமதமாக கடந்த மாதம் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும், 20 நாட்களுக்குள், ஆண்டு சராசரியை (44 செ.மீ) நெருங்கி 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது: 

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காலை 8.30( நேற்று) நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, வட தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துள்ளது. 

அதிகபட்சமாக நாகை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரத்தில் 18 செ.மீ, சீர்காழியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்காக நகர்ந்து வருகிறது. 

இந்த நிகழ்வு , கடல் மற்றும் தரைப்பகுதிலேயே நகர்வதால், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் கனமழை நீடிக்கும். அதன் பின் மழை குறையும். 

வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக மற்றும் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும், சில நேரத்தில் தொடர் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. 

 
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். வங்கக்கடல் நிகழ்வானது மேலும் தீவிரமடையாமல் தொடர்ந்து நீடித்தால் அதிகளவு மழைப் பொழிவை தரும். இவ்வாறு அவர் கூறினார். 

கனமழை

வானிலை மையம் அறிவித்துள்ளது போல், நேற்று நள்ளிரவு முதல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

சென்னையைப் பொறுத்தவரை, இன்று காலை 8.30 மணி முதல் 12 மணி வரை நுங்கம்பாக்கம் பகுதியில் 3 செ.மீ, மீனம்பாக்கத்தில் 8 செ.மீ மழை பதிவாகியிருந்தது. தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
Tags:
Privacy and cookie settings