பெற்றோரை இழிந்து பேசிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை !

நாமக்கல்லில் பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை வேண்டி பிளஸ் 1 மாணவர் ஒருவர் புகார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மேட்டுக்கடை ஜீவா நகரைச் சேர்ந்த குமரேசன் மகன் சமரன். அவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில்,

 "நான் வெப்படை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறேன். கடந்த 12 ஆம் தேதி வகுப்பாசிரியர் பழனிச்சாமி கேட்ட கேள்விக்கு நான் பதில் அளிக்கவில்லை.

இதனால், ஆசிரியர் அடித்ததில் எனக்கு கன்னம் வீங்கியது. மாலையில் வீடு திரும்பிய என்னை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மறுநாள் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட பெற்றோருடன் பள்ளிக்குச் சென்றபோது அங்கு தலைமை ஆசிரியர் இல்லை.

உதவித் தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த வகுப்பு ஆசிரியர் செளந்தரராஜன் என் பெற்றோரை அவமரியாதையாகப் பேசி பள்ளியை விட்டு வெளியேற்றினார்.

மேலும் வகுப்பறைக்குச் சென்ற பிறகு, மாணவர்கள் மத்தியில் வைத்து என்னையும், பெற்றோரையும் தரக்குறைவாகப் பேசினார். இதனால் சக மாணவர்கள் மத்தியில் நான் அவமானப்பட நேர்ந்தது.
என்னை அடித்து அவமானப்படுத்தியதுடன், பெற்றோரைத் தரக்குறைவாகப் பேசிய பள்ளி ஆசிரியர்கள் பழனிவேல், செளந்தரராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும்,

அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க இடையூறு இல்லாத சூழலையும் ஆட்சியர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, விசாரணை செய்து அறிவுரை வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings