தமிழ் திரையுலகில், தனுஷ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
'நானும் ரவுடிதான்' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதி படத்தை தயாரிக்கவிருப்பதாக தனுஷ் தெரிவித்தார். இப்படத்தை யார் இயக்க இருக்கிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
'கான்' கைவிடப்பட்டத்தைத் தொடர்ந்து, தனுஷ் தயாரிப்பு நிறுவனத்துக்கு படம் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் செல்வராகவன். இதனால் விஜய்சேதுபதி - செல்வராகவன் இருவரும் இணைந்து படம் இயக்கவிருக்கிறார்கள் என்பது தான் தற்போதைய தகவல்.
இக்கூட்டணி 'ப்ரேமம்' ரீமேக் பண்ணவிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியான போது, 'ப்ரேமம்' ரீமேக்கை அல்போன்ஸ் புத்திரன் மட்டுமே இயக்க முடியும் என்று செல்வராகவன் முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து "'ப்ரேமம்' உரிமை என்னிடம் இல்லை" என்று தனுஷ் ட்விட்டர் தளத்தில் ரசிகர்களோடு கலந்துரையாடும் போது தெரிவித்தார்.
இதனால், செல்வராகவன் - விஜய்சேதுபதி கூட்டணி உருவாவது குறித்து பலரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். ஆனால், இது குறித்து தனுஷ் தயாரிப்பு நிறுவனத்தில் விசாரித்த போது அவர்கள் மறுக்கவும் இல்லை, உறுதி செய்யவும் இல்லை.
மேலும், "செல்வராகவன் தற்போது தான் கதை எழுதி வருகிறார். அவர் கதை எழுதி முடித்தவுடன் தான் அனைத்துமே இறுதி செய்யப்படும்" என்றும் செல்வராகவனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.