தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங் களிலும், புதுச்சேரியிலும் 2 நாட்கள் இந்த ஆய்வு மேற் கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை யால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. புதுச்சேரியும் மழை சேதத்திலிருந்து தப்பவில்லை. தமிழக அரசு சார்பில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உடனடி சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து சேத விபரங்கள் குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.8,481 கோடி தேவைப்படுவதாகவும் இதில் ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
தமிழக வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.939 கோடியே 63 லட்சத்தை ஒதுக்கீடு செய்து பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். மேலும் வெள்ள சேத விபரங்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைப்பதாக நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்தது.
மத்திய உள்துறை அமைச்ச கத்தின் இணை செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையில் விவசாயம், ஊரக வளர்ச்சி, குடிநீர் மற்றும் எரிசக்தி துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை,
சாலை போக்குவரத்து, சுகாதாரத்துறை பிரதிநிதிகள், பெங்களூருவில் உள்ள மத்திய நீர்வளத் துறை பிரதிநிதி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். அவர்களுடன் தமிழக அரசு அதிகாரிகளும் செல்கின்றனர்.
இந்தக் குழுவினர் தமிழகத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்து, சேத விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார்கள் என கூறப்படுகிறது.


