காதலியின் வீட்டில் இருந்தபோது, உறவினர்கள் திடீரென வந்ததால் 6-வது மாடியில் இருந்து தப்ப முயன்ற இளம் நடிகர் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், குண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலபிரசாந்த் (20). இவர் ‘ஜோதிலட்சுமி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 3 குறும்படங்களிலும் நடித்துள்ள இவர், கதாநாயகனாக நடித்துள்ள ‘இப்பட்லோ ராமுடிலா, சீதலா எவருண்டாரண்டி பாபோ’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
ஹைதராபாத் மூசாப்பேட் ஆஞ்சநேயபுரம் பகுதியில் வசித்து வந்த பாலபிரசாந்த் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால், அந்தப் பெண்ணின் வீட்டுக்கு பிரசாந்த் சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணின் உறவினர்கள் திடீரென வந்ததால், அந்த வீட்டின் பின் புறம் பைப் வழியாக தப்பிக்க முயன்றார். அப்போது அவர், 6 வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூகட்பல்லி போலீஸார், பிரசாந்தின் சடலத்தை கைப்பற்றி, ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று காலை நடிகரின் சடலம் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.