சுற்றுச்சூழலை பாதிக்காத வால்வோ ஹைபிரிட் பேருந்துகள் !

வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடுகளை குறைக்கும் வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை பெருமளவில் தயாரிக்க "ஃபேம் இந்தியா' எனும் திட்டத்தை அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. 
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சுவீடனை சேர்ந்த 'வால்வோ’ நிறுவனத்தின் உதவியுடன் ஹைபிரிட் வால்வோ பேருந்துகளை இயக்க நவி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

இந்த பேருந்துகள் பெங்களூருவில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட உள்ளது. பொதுவாக, ஹைபிரிட் வால்வோ பேருந்துகள் எலக்ட்ரிக் மோட்டாரை போன்றே அதிக உந்துதலில் இயங்கும். 

சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிக்காத வகையில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த பேருந்துகள் சுற்றுச்சூழலின் நண்பனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல்முறையாக இந்தியாவிலேயே இவ்வகை பேருந்துகளை தயாரித்து வழங்கிறது வால்வோ. 2001 முதல் இதுவரை, உலகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 5,300-க்கும் அதிகமான ஹைபிரிட் பேருந்துகளை தயாரித்து வழங்கியுள்ளது.  

சாதாரண டீசல் பேருந்துகளை விட இவ்வகை பேருந்துகளுக்கு 39 சதவீதம் அளவிற்கு குறைவான எரிபொருளே போதுமானது. தற்போது ஸ்டாக்ஹோம், ஹாம்பர்க் நகரங்களில் ஓடும் இந்த பேருந்துகள் 75 சதவீதம் வரை எரிபொருளை சேமித்து வருகின்றன. 

இந்தியாவில் மட்டும் 34 முக்கிய நகரங்களில் 1,500-க்கும் அதிகமான ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் பேருந்துகள் இயங்கி வருகின்றன.
Tags:
Privacy and cookie settings