பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது இஸ்லாமுக்கு விரோதமானது, அவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள மட்டுமே தகுதியானவர்கள் என்று, கேரள மாநில சன்னி இஸ்லாமிய பிரிவு தலைவர் அபூபக்கர் முசல்யார் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆல் இந்திய சன்னி ஜாமியாத்துல் உலமா அமைப்பின் தலைவரான முசல்யார், கோழிக்கோட்டில் நடைபெற்ற முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பு, கூட்டத்தில் பேசியதாவது: பாலின சமத்துவம் என்பது, நிஜத்தில் நடைபெறப்போவது கிடையாது.
அப்படி நடக்க வைக்க முயலுவது இஸ்லாமுக்கு எதிரானது. மனிதத்துக்கும், அறிவுக்கும் எதிரானது. பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு இணையாக முடியாது. பெண்கள், குழந்தைகளை பெற்றுக்கொள்ள மட்டுமே தகுதியானவர்கள்.
தாங்க முடியாது நெருக்கடியான காலகட்டங்களை, பெண்களால் தாக்குப்பிடிக்க முடியாது. உதாரணத்துக்கு, ஆயிரக்கணக்கான, இதய நோய் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு மத்தியில், ஒரு பெண் மருத்துவர் இருந்தால் ஆச்சரியமே.
இது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது. சேர்ந்து படிக்க கூடாது கல்லூரிகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்த்து படிக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்பது இஸ்லாமையும், அதன் கலாச்சாரத்தையும் ஒடுக்கும் ஒரு முயற்சிதான். இவ்வாறு அவர் பேசினார்.
பாலியல் கொடுமை? கேரள மதரசாக்களில், சிறுவர், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதாக, முஸ்லிம் பெண் பத்திரிகையாளர், தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்த கருத்தை, முசல்யார் மறுத்தார். ஆதாரம் இருந்தால் நிரூபிக்க வேண்டும் என்று முசல்யார் கூறினார்.
சர்ச்சை மன்னர் சமீபத்தில், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு தருவது மிகவும் அதிகப்படியான நடவடிக்கை என்று கருத்து கூறி முசல்யார் சர்ச்சைக்குள்ளாகியிருந்தார். சர்ச்சை பெரிதானதால் தனது பேச்சை மாற்றிக்கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.