உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தமு மசிஃப் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும்.
செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பரப்பளவில் இங்கிலாந்து தீவுகளை அல்லது நியூமெக்சிகோ மாகாணத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் வருடங்களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக உள்ளது.
உலகில் உள்ள செயல்படும் எரிமலை களிலேயே பெரியதாகக் கருதப்படு கின்ற ஹவாய் தீவில் இருக்கும் மௌனா லோவா 5,179 சதுர கி.மீ பரப்பளவு தான் கொண்டது. இதனுடைய அளவு தமு மசிஃபைக் கணக்கிடும் போது 2 சதவிகிதம் தான் இருக்கும்.
தமு மசிஃபின் அளவு மட்டுமின்றி, அமைப்பும் சிறப்பு பெறுகின்றது. இதன் முகட்டின் உயரம் கடல் மேற்பரப்பிலிருந்து 6,500 அடிக்குக் கீழும், அடிப்பரப்பு நீண்டு பரந்தும் காணப்படுகின்றது.
இதனால் அப்போது எரிமலைகள் வெடித்துச் சிதறியதில் தோன்றிய லாவா உலகின் மற்ற எரிமலைகளைப் போல் உயரமாகப் படியாமல் நீண்ட தூரம் பரவியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.
இதுநாள் வரை, ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிமலையின் அமைப்பு குறித்து உறுதி செய்துகொள்ள முடியாமல் இருந்தார்கள்.
ஆனால், தற்போது உலகிலேயே பெரியதான ஒற்றை எரிமலை இது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர்.