இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி 2 விநியோக உரிமையைக் கைப்பற்றிட ஐரோப்பிய விநியோகஸ்தர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் 10 ம்தேதி வெளியான பாகுபலி திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.
படம் வெளியாகி 5 மாதங்கள் தாண்டிய நிலையில் தற்போது பாகுபலி 2வின் ஐரோப்பிய விநியோக உரிமையைக் கைப்பற்றிட அங்குள்ள விநியோகஸ்தர்களிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.
ஐரோப்பியத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களில் ஒருவருமான பியர் அஸ்ஸாலின் இது குறித்து கூறும்போது " முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியப் படங்களின் மதிப்பானது ஐரோப்பிய சந்தைகளில் உயர்ந்திருக்கிறது.
நிறைய விநியோகஸ்தர்கள் பாகுபலி 2 படத்தின் உரிமைக்காக போட்டி போடுகின்றனர் இது சந்தோஷமாக இருக்கிறது என்று தற்போதைய நிலவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இன்டிவுட் பிலிம் மார்க்கெட்டைச் ( வெளிநாட்டுப் படங்களை நம்ம ஊரிலும், நம்ம ஊர் படங்களை வெளிநாட்டிலும் விற்பனை செய்யும் இடம்) சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கூறும்போது " இந்தியப் படங்களுக்கு இது சரியான ஒரு சமயம், எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்தியப் படங்கள் வெளிநாடுகளில் நன்றாக ஓடும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இலத்தீன், அமெரிக்கா மற்றும் சைனா போன்ற நாடுகளில் பாகுபலி 2 படத்தின் விநியோக உரிமைகள் ஏற்கனவே பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஹவாய் மற்றும் ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நவம்பர் 15ம் தேதி பாகுபலி திரைப்படமானது மாலை 5.45 மணியளவில் திரையிடப்பட்டிருக்கிறது. திறமை மட்டுமல்ல அதிர்ஷ்டமும் பாகுபலி குழுவினருக்கு அளவுக்கதிகமாகவே கைகொடுக்கிறது!