சமரச முயற்சிகள் தோல்வி.. சரத்குமார் அணி கூட்டம்!

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் அணி ஆதரவாளர்கள் கூட்டம் வருகிற 16-ந்தேதி ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சரத்குமார் அணியும் விஷால் அணியும் மோதுகின்றன. இரு தரப்பினரும் தத்தமது அணிகளுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தேர்தலில் போட்டியை தவிர்த்து இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், நடிகர் சங்கத் தேர்தல் முதல் முறையாக ஒரு பொதுத் தேர்தலுக்கு இணையான பரபரப்போடு நடக்கவிருக்கிறது. 

விஷால் அணியினர் ஏற்கனவே ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். சரத்குமார் அணியினரும் நேற்று முன்தினம் ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்துவதாக இருந்தது. 

நடிகை மனோரமா மரணம் அடைந்ததை தொடர்ந்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த கூட்டத்தை வருகிற 16-ந்தேதி நடத்துகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 16-ந் தேதி மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது.

இதில் சரத்குமார் அணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. இங்கு வைத்துதான் விஷால் அணியினரும் தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். சரத்குமார் தனது அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி நிற்கிறார். 
 
துணைத்தலைவர் பதவிக்கு விஜயகுமார், சிம்பு ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் போட்டியிடுகின்றனர். இந்த கூட்டத்துக்கு முன்னதாக, நாளை செய்தியாளர்களைச் சந்திக்கவிருக்கிறது சரத்குமார் அணி.
Tags: