தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.160.. மத்திய அரசு !

நாடு முழுவதும் உள்ள கூலி தொழிலாளர்களுக்கான தேசிய தளமட்ட குறைந்தபட்ச கூலி ரூ.137 ஆக இருந்து வந்தது. இதை மத்திய அரசு ரூ.160 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில முதல் அமைச்சர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர், அனைத்து பட்டியலிடப்பட்ட வேலைகளிலும் குறைந்தபட்ச தினக்கூலியை ஜூலை 1-ந் தேதி முதல் ரூ.137-ல் இருந்து ரூ.160-க்கு குறைவில்லாமல் நிர்ணயிக்கவும், மாற்றி அமைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கூறி உள்ளார்.

மேலும், கூலித்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை உறுதி செய்யும் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 1948-ம் ஆண்டு இயற்றப்பட்ட குறைந்தபட்ச கூலிகள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அதில் கூறி இருப்பதாவது: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான தொழிற்சாலை தொழிலாளர்கள் விலை குறியீட்டு எண்ணை,

2012 ஏப்ரல் மாதம் தொடங்கி 2013 மார்ச் மாதம் வரையிலான தொழிற்சாலை தொழிலாளர்கள் விலை குறியீட்டு எண்ணுடன் ஒப்பிட்டு பரிசீலித்ததில், சராசரி தொழிற்சாலை தொழிலாளர்கள் விலை குறியீட்டு எண் ரூ.215.17-ல் இருந்து ரூ.250.83 ஆக உயர்ந்துள்ளது.
அதற்கேற்ப தேசிய தளமட்ட குறைந்தபட்ச தினக்கூலி, தற்போதைய ரூ.137-ல் இருந்து ரூ.160 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கூலி கட்டமைப்பை கொண்டிருக்கவும், நாடு முழுவதும் குறைந்தபட்ச கூலியில் உள்ள முரண்பாடுகளை குறைக்கவும், தேசிய தளமட்ட குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது நேரத்துக்கு நேரம் தொழிற்சாலை தொழிலாளர்கள் விலை குறியீட்டு எண் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. கடைசியாக இந்த தேசிய தளமட்ட குறைந்தபட்ச கூலி 2013-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ.115-ல் இருந்து ரூ.137 என மாற்றி அமைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1 ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள கூலி உயர்வினால், நாடு முழுவதும் உள்ள அமைப்பு ரீதியில் வராத 34 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
Tags:
Privacy and cookie settings