கத்தார் சிறையில் 7 மீனவர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
குமரி மாவட்டம் இனயம்புத்தன்துறை மற்றும் முள்ளூர்துறையை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் பஹ்ரைன் நாட்டில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் கடந்த ஜூலை 3ம் தேதி 2 விசைப்படகுகளில் பஹ்ரைன் நாட்டிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

முள்ளூர்துறையை சேர்ந்த வளன்(31), இரவிபுத்தன்துறையை சேர்ந்த இரவிஸ்டன்(38) ஆகியோர் விசைப் படகுகளை இயக்கினர். இந்நிலையில் இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கத்தார் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இந்த மீனவர்களில் 5 பேர் இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தையும், 2 பேர் முள்ளூர்துறை மீனவ கிராமத்தையும் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்கள் கத்தார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 கைது செய்யப்பட்ட 7 மீனவர்களுக்கும் ரூ.4 லட்சத்து 95ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக இம்மீனவர்களுடன் பஹ்ரைன் நாட்டில் பணிபுரிபவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை செலுத்த படகின் முதலாளிக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே இவர்களது வழக்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

இம்மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டனி கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings