திருச்சி:பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்வதில், புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி லிங்கசாமி வெளியிட்ட அறிவிப்பு:


பாஸ்போர்ட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், பெயர் மாற்றம் தொடர்பாக, நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்ட அறிவிப்பு விளம்பரத்தையும், பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக, அரசிதழில் பிரசுரமான அறிவிப்பையும் இணைத்து வழங்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

மாநிலங்களுக்கு மாநிலம், இதில் வேறுபாடுகள் இருந்ததால், மத்திய அரசின் வெளியுறவுத்துறை, இதனை ஒழுங்குபடுத்தி உள்ளது. புதிய விதிமுறைப்படி, பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள்,

பெயர் மாற்றம் தொடர்பாக நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்ட அறிவிப்பு விளம்பரம் அல்லது மத்திய, மாநில அரசின் அரசிதழில் பிரசுரமான அறிவிப்பு, இவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து அனுப்பினால் போதும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 24ம் தேதி, பாஸ்போர்ட் சேவை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பாஸ்போர்ட் சேவை தின மாநாடு, டில்லியில் கடந்த, 24ம் தேதி முதல், 26ம் தேதி வரை நடந்தது.

இதில், திருச்சி பாஸ்போர்ட் அலுவலக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான அங்கீகார அதிகாரி மோகன், சிறந்த பணிக்கான "பாஸ்போர்ட் புரஸ்கார்' விருதை, மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.