இப்போது தங்கம் வாங்குவது சரியா?

விலை உயர்ந்தாலும் `விலை ஏறிட்டே இருக்கு இப்போதே வாங்கனும்’ என்று சொல்லுவார்கள். ஒரு வேளை கடுமையாக சரிந்தாலும் அப்போதும், `விலை குறையது இப்பவாவது வாங்கிடனும்’ என்று சொல்லுவார்கள் நம் மக்கள். 
 
ஆக மொத்தம் தங்கம் வாங்க வேண்டும், அவ்வளவுதான் திட்டமே. டிவியில் செய்தி பார்க்காதவர்களை கூட இப்போது வணிக செய்தி கூர்ந்து கவனிப்பதற்கு தங்கம் விலை சரிவை தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும். 

கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிந்திருக்கிறது. தற்போது ஒரு அவுன்ஸ் 1,100 டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 

இந்த சரிவு இனியும் தொடருமா, இப்போது தங்கம் வாங்கலாமா என்று ஆவலாக இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆலோசனை சொல்லும் விதமாகவே இந்த கட்டுரை எழுதப்படுகிறது. ஏன் சரிவு? வாங்கலாமா என்று பார்ப்பதற்கு முன்பு ஏன் சரிகிறது என்பதைப் பார்ப்போம். 

பொதுவாக எப்போதெல்லாம் சர்வதேச பொருளாதாரம் தேக்கநிலையை அடைகிறதோ அப்போதுதான் தங்கத்தின் விலை உயரும். 

குறிப்பாக அமெரிக்க பொருளாதாரம். அங்கே பொருளாதாரம் சிறப்பாக இருந்தது என்றால் அனைத்து முதலீடுகளும் டாலருக்கு செல்லும். தங்கம் தனது பொலிவை இழக்கும். 

இப்போதும் அதுதான் நடக்கிறது. இப்போது அமெரிக்காவில் வேலையில்லா தவர்களின் விகிதம் 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. 

அதனால் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் சரிவுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். 

தவிர கிரீஸ் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு, அமெரிக்கா, ஈரான் இடையேயான ஒப்பந்தம், சீனாவின் தேவை குறைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கத்தின் விலை குறைந்துவருகிறது. இதையெல்லாம் விட தங்கம் விலை உயர்வதற்கு உடனடியாக எந்த காரணமும் இல்லை என்பதே உண்மை. 

வரும் காலம் எப்படி? இப்போதைக்கு ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம் 1,097 டாலர் என்ற நிலையில் (ஒரு கிராம் ரூ. 2,377) அளவில் வர்த்தகமாகி வருகிறது. 

பெரும்பாலான சர்வதேச வல்லுநர்கள் ஒரு அவுன்ஸ் 1,000 டாலர் வரை சரியலாம் என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

உலக தங்க கவுன்சில் தகவல்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தை உற்பத்தி செய்வதற்கு 914 டாலர் முதல் 1,031 டாலர் வரை செலவாகிறது. இதனால் தற்போதைய நிலை மையை விட இன்னும் கூட தங்கத்தின் விலை சரி யலாம். 
 

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிந் தாலும், இந்தியாவிலும் அதே அளவுக்கான பிரதிபலிப்பு இருக்கும் என்று சொல்லமுடியாது. தங்கம் விலை சரிந்தால், டாலர் மதிப்பு உயரும்.

அப்போது ரூபாய் மதிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே இந்தியாவில் தங்கம் விலை நிலவரம் இருக்கும். 1,000 டாலர் வரை வரும் காத்திருப் பீர்களா? இப்போது தங்கம் வாங்குவது சரியா?
Tags:
Privacy and cookie settings