விம்பிள்டன் டென்னிஸ்: 4-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 


படம்: யுஎஸ்ஏ டுடே ஸ்போர்ட்ஸ்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் ஜோகோவிச் 7-6 (2), 6-4, 6-4 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 21-வது இடத்தில் இருந்த பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார். 

இறுதிச்சுற்றில் சானியா ஜோடி 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ராகேல் கோப்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியைத் தோற்கடித் தது. 

கடைசியாக 1998-ல் நடை பெற்ற விம்பிள்டன் போட்டியில் செக்.குடியரசின் ஜனா நோவோட் னாவுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஹிங்கிஸ், 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் விம்பிள்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். 

இன்று மகளிர் இறுதிச்சுற்று 

இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸும், ஸ்பெயினின் 21 வயது வீராங்கனையான கார்பைன் முகுருஸாவும் மோதுகின்றனர். 

கடந்த 19 ஆண்டுகளில் விம்பிள்டன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் முதல் ஸ்பெயின் வீராங்கனையான முகுருஸா, இன்று செரீனாவை வீழ்த்தும்பட்சத்தில் கடந்த 21 ஆண்டுகளில் விம்பிள்டனில் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார். 

இதற்கு முன்னர் 1994-ல் ஸ்பெயினின் கான்சிடா மார்ட்டினிஸ், மார்ட்டினா நவரத்திலோவாவை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார். அப்போது முகுருஸா 9 மாத குழந்தையாக இருந்தார். 

டாப்-10 வீராங்கனைகளான ஏஞ்ஜெலிக் கெர்பர், கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் போட்டி யில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் முகுருஸா, ஸ்பெயின் ரசிகர்களின் நீண்டகால ஏக்கத்தை தீர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார். 

 

இதில் வெல்லும்பட்சத்தில் சர்வதேச தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறுவார். இதன்மூலம் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் வந்த 4-வது ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் செரீனாவை வீழ்த்திய முகுருஸா இந்த முறையும் அதேபோன்றதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அதேநேரத்தில் மகளிர் டென்னிஸ் உலகில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் செரீனாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதையும் மறுக்க முடியாது.

 விம்பிள்டனில் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் செரீனா, 6-வது பட்டத்தை வெல்வதில் தீவிரம் காட்டி வருகிறார். இதில் வெல்லும்பட்சத்தில் அவருடைய 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இது அமையும்.
Tags:
Privacy and cookie settings