அதிகாரிகளின் அலட்சியத்துக்கு இதோ உதாரணம் : வாக்காளர் 1; அடையாள அட்டை 2

ராமநாதபுரம் அருகே வாக்காளர் ஒருவருக்கு வெவ்வேறு முகவரியில் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 30 பேர் வரை இப்படி குழப்பமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
 
ராமநாதபுரம் அருகே குயவன்குடி ஊராட்சி சாத்தான் குளத்தை சேர்ந்தவர் ஹபீப் ரகுமான் மகன் கலீல் ரகுமான் (30). மலேசியாவில் வேலை செய்து வருகிறார். கடந்த 2006ல் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தார். அடையாள அட்டை முறையான முகவரியுடன் கிடைத்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது வீட்டில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு அதிகாரிகள் சென்றனர். அவரது குடும்பத்தினர் கலீல் ரகுமான் மலேசியாவில் உள்ளதாகவும், அவருக்கு ஏற்கனவே அடையாள அட்டை உள்ளதாகவும் தெளிவாக கூறினர். இந்த விபரத்தை அவரது குடும்பத்தினர் கலீல் ரகுமானிடம் செல்போன் மூலம் தெரிவித்தனர்.

அவரும் ஏற்கனவே அடையாள அட்டை உள்ளதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கலீல் ரகுமான் மலேசியாவில் இருந்து சொந்த கிராமத்துக்கு திரும்பினார். 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டை வந்தது.

அதில் அவரது முகவரி இல்லாமல் அவரது பெயர் பட்டிணம் காத்தான் ஊராட்சியில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. குழப்பம் அடைந்த கலீல் ரகுமான் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதிகாரிகள் பொறுப்பில்லாமல் சரியாக உள்ளதை வைத்துக் கொண்டு மற்றதை தூக்கி எறியுங்கள் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் இதற்கு முடிவு தெரியாமல் குழப்பத்தில் அவர் உள்ளார். இதுகுறித்து கலீல் ரகுமான் கூறுகையில், எங்களது கிராமத்தில் சுமார் 30 பேருக்கு இது போன்ற மாற்று முகவரியில் அடையாள அட்டை வந்துள்ளது.

பெரும்பாலும் வெளிநாட்டில் வேலை செய்பவர்களாக உள்ளனர். முகவரி தவறாக உள்ள அட்டையை எறிந்து விட்டாலும், தேர்தல் நேரத்தில் என்னுடைய பெயரில் மாற்று முகவரியில் ஒருவர் கள்ள ஓட்டு போட வாய்ப்புள்ளது.

மலேசியா செல்வதற்குள் இதை சரி செய்து விடலாம் என்றால் அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். வருங்காலத்தில் இதை கண்டுபிடித்து என்னுடைய சொந்த முகவரி அட்டையை நீக்கி விட்டால், நான் சொந்த கிராமத்தில் ஓட்டு போட முடியாமல் போய்விடும்’ என்றார்.
Tags:
Privacy and cookie settings