ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கும் தமிழக அரசின் திட்டத்துக்காக முதல்வர் ஜெயலலிதாவை பாகிஸ்தான் தொலைக்காட்சி சானல் ஒன்று பாராட்டியதாக அதிமுக பெருமை கொண்டாடி யுள்ளது.
இது குறித்து அதிமுக பத்திரிகையான டாக்டர் நமது எம்ஜிஆர்-ல் "ரம்ஜான் புனித மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க தமிழக அரசு மசூதிகளுக்கு இலவச அரிசித் திட்டத்தை கொண்டு வந்துள்ளதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாகிஸ்தான் தொலைக்காட்சி சானலான SAAMA பாராட்டியுள்ளது.
தங்கள் நாட்டு அரசும் இத்திட்டத்தைப் பின்பற்ற அந்த சானல் வலியுறுத்தியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரு செய்தித்தாளும் அந்த சானலின் வீடியோவிலிருந்து எடுத்த ஜெயலலிதாவின் படத்தை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் செய்தி ஏஜென்சி ஒன்றின் செய்தியின் அடிப்படையில் இந்த செய்தியை ஒளிபரப்பியதாக அந்த சானல் தெரிவித்துள்ளதாக நமது எம்.ஜி.ஆர். கூறியுள்ளது.
ரம்ஜான் நோன்புக்காக 4,500 டன்கள் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

