வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.12 லட்சம் காணிக்கை!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம் பேட்டைத் தெருவில் உள்ள பாடைகட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 23–ந் தேதி நடைப்பெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் தங்களின் பிரச்சனைகளை மனதில் கொண்டு அம்மனுக்கு வேண்டி கொண்டு அவைகள் நிவர்த்தியானதும் காணிக்கையாக பணம், நகைகள் செலுத்துவது வழக்கம்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளில் தற்காலிக 7 உண்டியல்கள் கடந்த 1–ந் தேதி எண்ணப்பட்டு தங்கம் 58 கிராமும், வெள்ளி 365 கிராமும் பணமாக ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 913 இருந்தது கணக்கிடப்பட்டது.

மேலும் கோவிலில் உள்பகுதிகளில் நிரந்தரமாக உள்ள 6 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை திருவாரூர் மாவட்ட உதவி ஆணையர் சிவராம்குமார் முன்னிலையிலும்

மகா மாரியம்மன் ஆலய தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையிலும் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நடைபெற்றது.

இப்பணியில் திருவாரூர் ஐயப்பா சேவா சங்கத்தினர், பாபநாசம் 108 சிவாலய குழுவினர் சிட்டி யூனியன் பேங்க் வங்கி ஊழியர்கள், ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.12 லட்சத்து 36 ஆயிரத்து 502 மற்றும் 303 கிராம் தங்கம், 632 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது.

மேலும் கோவில் மேலாளர் தமிழ்செல்வம், பணியாளர்கள் சீனு, குமார் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பலரும் இப்பணியில் கலந்துகொண்டனர்.
Tags: