பாதுகாப்பு வளையத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் !

மெட்ரோ ரயில் நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதிதிட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் விமானத்தை கடத்திச்செல்ல திட்டமிட்டு இருப்பதை ராணுவ உளவுத்துறை கடந்த வாரம் கண்டுபிடித்து எச்சரித்தது. இந்த நிலையில் ராணுவ உளவுத்துறை மேலும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு குழுக்களாக தீவிரவாதிகள்   ஊடுருவி, மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று கடந்த 31-ந்தேதி மத்திய உள்துறைக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் ராணுவ உளவுத்துறை அனுப்பியது.

அதில் 2014 புத்தாண்டு தொடக்கத்தின் முதல் 10 நாட்களில் இந்த தாக்குதல் நடைபெறக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ராணுவ உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 140 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. தினமும் சுமார் 2 லட்சம்பேர் மெட்ரோ ரயிலை பயன்படுத்துகிறார்கள். டெல்லி மெட்ரோ ரயில்களுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் சுமார் 5 ஆயிரம் மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் அசோக்பார்க் மெயின், இந்திர லோக், கீர்த்தி நகர், ராஜீவ் சவுக் கஷ்மீரி கேட், மத்திய தலைமை செயலகம் ஆகிய 6 ரயில் நிலையங்களும் எப்போதும் பிசியாகவே இருக்கும்.

பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவதும், போவதுமாக இருப்பார்கள். எனவே மும்பை தாக்குதல் பாணியில் இந்த ரயில் நிலையங்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே மெட்ரோ ரயில் நிலையங்களில் 5300 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இது தவிர அதிரடிப்படை வீரர்கள், மோப்ப நாய்படை, வெடிகுண்டு செயல் இழப்பு படை ஆகியோரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர பாதுகாப்புப்படை வீரர்களின் 8 மணி நேர சுழற்சி முறை வேலையை 10 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings